இலவச உணவு தானிய திட்டம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

Author: Aarthi Sivakumar
24 June 2021, 9:18 am
Quick Share

புதுடெல்லி: பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தை மேலும் ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்த நிலையில் பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் மே மற்றும் ஜூன் மாதங்களில் ரேஷன் கடைகளில் 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இதன்பின், இம்மாத துவக்கத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக பிரதமர் மோடி பேசுகையில், பிரதமர் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் தீபாவளி பண்டிகை வரை ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். இதனால் நாடு முழுவதும் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைவர் என்றார்.

Food_Grains_UpdateNews360

இந்நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம், கொரோனா மூன்றாவது அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் ஏழைகள்நல உணவு திட்டத்தின் கீழ், இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை ஜூலை முதல் நவம்பர் வரை ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, இலவச உணவு தானிய திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். இதனால், 81 கோடியே 35 லட்சம் பேர் பலனடைவர். இதன் மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது. இதனால், அரசுக்கு 67 ஆயிரத்து 266 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Views: - 291

0

0