பாதுகாப்புத் துறையின் ரகசிய ஆவணங்கள் பத்திரிகையாளர் கையில் வந்தது எப்படி..? டெல்லி போலீஸ் விசாரணை..!
19 September 2020, 11:58 amஅதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கில் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, டெல்லி சிறப்பு போலீஸ் படையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
“அவர் பாதுகாப்பு தொடர்பான சில ரகசிய ஆவணங்களை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது” என்று டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவின் டி.சி.பி சஞ்சீவ் யாதவ் தெரிவித்தார்.
பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரான சர்மா திங்களன்று கைது செய்யப்பட்டு மறுநாள் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை ஆறு நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பியது.
அவர் கைது செய்யப்பட்ட பின்னர், டெல்லி காவல்துறை அவரது மடிக்கணினி, அவரது மொபைல் போன் ஆகியவற்றைக் கைப்பற்றியதுடன், அவர் யாருடன் தொடர்பு கொண்டார் என்பதை அறிய அவரது அழைப்பு விவர பதிவுகளை ஸ்கேன் செய்து வருகிறது.
இரகசிய ஆவணங்களை கொள்முதல் செய்வதில் அவர் ஈடுபட்டிருப்பது குறித்து டெல்லி காவல்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்ததாகவும், இதையடுத்து அவர் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் சிறப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை அவர் எவ்வாறு வாங்கினார் என்பதையும், இதை தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் அறிய சிறப்பு செல் அவரை விசாரிக்கிறது.