விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு : தமிழக அரசு ஆதரவு!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2023, 4:59 pm

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு : தமிழக அரசு ஆதரவு!

இன்று தலைநகர் டெல்லியில் 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாநில நிதியமைச்சர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது, குறிப்பிட்ட பொருட்கள், சேவைகளுக்கு வரி விதிப்பு, வரி குறைப்பு உள்ளிட்டவைகள் குறித்து நிதியமைச்சர் தலைமையில் , நிதித்துறை அதிகாரிகள், மாநில பிரதிநிதிகள் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பர்.

இந்த முடிவுகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமருக்கு தெரிவிப்பார் . பிரதமரின் உத்தரவின் பெயரில் அந்த வரி சலுகை, வரி விதிப்பு அமலுக்கு வரும்.

இன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இந்த முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறுதானிய உணவு பொருட்கள் மீதான வரிகள் குறைப்பு பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சிறுதானியங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் முடிவுக்கு தமிழக அரசு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

இந்த வரி குறைப்பால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், சிறுதானிய உற்பத்தி அதிகரிக்கும். அதனை உற்பத்தி செய்வோரும் பயனடைவர் என அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

இதுபோல பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் தங்கள் மாநில அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் நிறைவில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 70 சதவீத கலவை கொண்ட சிறுதானிய தினை மாவுக்கு வரி விகிதம் இல்லை எனவும், தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவன பெயர் பதிவிட்டு பேக்கிங் செய்ப்படும் தினை மாவுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும், முன்னதாக 18 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது என்றும் அவர் பேசினார்.

மேலும், வெல்லப்பாகு மீது விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். கால்நடை தீவன விலை குறையும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும், இந்த கூட்டத்தில் தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடலோர வணிகங்களை செய்யும் வெளிநாடு கப்பல்களுக்கு விதிக்கப்படும் IGSTயில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…