தனியார் மயமாகும் திருவனந்தபுரம் விமான நிலையம்: கேரள அரசு கடும் எதிர்ப்பு..!!

21 January 2021, 3:28 pm
Vijayan - updatenews360
Quick Share

கேரளா: திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பு அதானி குழுமத்துக்கு ஒப்படைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை, தனியார் ஒத்துழைப்புடன் மேம்படுத்த விரும்புவதாக மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கேரள தலைநகர் திருவனந்தபுரம், அசாமின் கவுகாத்தி, உத்தர பிரதேசத்தில் லக்னோ, ஆமதாபாத், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர், கர்நாடக மாநிலம் மங்களூரு ஆகிய ஆறு விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக மத்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவித்தது.

இதனையடுத்து, இந்த விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் உரிமம் அதானி குழுமத்துக்கு கிடைத்தது. இந்நிலையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘வர்த்தக ஒப்பந்தம் மூலம், திருவனந்தபுரம், கவுகாத்தி, ஜெய்ப்பூர் விமான நிலையங்களை, 2021 ஜனவரி 19ம் தேதியில் இருந்து 180 நாட்களுக்குள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதானி குழுமம் நிர்வகிக்க துவங்கலாம்’ என கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு கேரள சட்டசபையில் விவாதப் பொருளானது. கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து பதிலளித்த முதலமைச்சர் பினராயி விஜயன், ‘விமான நிலைய தனியார்மயமாக்கலை எதிர்த்து, விமான நிலைய ஊழியர்கள் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மாநில அரசுக்கு அளித்த உறுதியை மத்திய அரசு மீறியுள்ளது. விமான நிலையங்களை நிர்வகிக்கும் அனுபவம் சிறிதும் இல்லாத குழுமத்துக்கு, விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதிகாரத்தை நிலைநாட்டும் நோக்கில் இந்த விவகாரத்தில், மத்திய அரசு சர்வாதிகாரத்தனமாக நடந்து உள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை, மாநில அரசிடமே வழங்க, மத்திய அரசை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.

Views: - 11

0

0