குவைத் மன்னருக்கு அரசு முறை துக்கம் அனுசரிக்கும் மத்திய அரசு..! அரைக் கம்பத்தில் தேசியக்கொடியை பறக்கவிடவும் உத்தரவு..!

Author: Sekar
1 October 2020, 7:35 pm
sheikh_sabah_updatenews360
Quick Share

செப்டம்பர் 29 அன்று காலமான குவைத் மன்னர் ஷேக் சபா அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அக்டோபர் 4’ஆம் தேதி இந்தியா முழுவதும் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்று நாடு முழுவதும் அனைத்து அரசுக் கட்டிடங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்.

91 வயதான குவைத் நாட்டின் மன்னர் ஷேக் சபா அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா கடந்த செப்டம்பர் 29 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

1990’களில் ராஜதந்திரியாக தனது பயணத்தைத் தொடங்கிய அல்-சபா பின்னர் நாட்டின் மன்னராக உயர்ந்தார். அரபு உலகின் அமைதிக்காக போராடிய அவர், மோடி பிரதமராக வந்த பின்னர் இந்தியா மற்றும் அரபு நாடுகளுக்கிடையேயான உறவுக்கு இணைப்பு பாலமாக விளங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் “குவைத் மன்னருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 2020 அக்டோபர் 4’ஆம் தேதி இந்தியா முழுவதும் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது” என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் நாள் முழுவதும் பறக்கவிடப்படும். அன்றைய தினம் அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்கள் எதுவும் இருக்காது என்று அது கூறியுள்ளது.

Views: - 49

0

0