இதுதான் கடைசி மற்றும் பெஸ்ட் ஆஃபர்..! வேளாண் அமைப்புகளுடனான பேச்சுவார்த்தையை நிறுத்த மத்திய அரசு திட்டம்..?

22 January 2021, 7:09 pm
farmers_govt_meeting_UpdateNews360
Quick Share

டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுக்கும் மூன்று மத்திய அமைச்சர்களுக்கும் இடையிலான பதினொன்றாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று முடிவடைந்தது.

இன்றைய பேச்சுவார்த்தையிலும் முட்டுக்கட்டைக்கு எந்தவிதமான தீர்வும் காணப்படவில்லை. அரசாங்கம் தனது சிறந்த திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும், இப்போது அதன் பொறுப்பு விவசாயிகளிடம் தான் உள்ளது என்றும் மத்திய அரசு விவசாயிகளுக்கு தெரிவித்தது.

உழவர் சங்கத் தலைவருடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “வேளாண் சங்கங்களின் பேச்சுவார்த்தையின் மையமாக விவசாயிகளின் நலன் இல்லாததால் பேச்சுவார்த்தைகள் முடிவில்லாமல் இருந்தன. நான் அதைப் பற்றி வருத்தப்படுகிறேன். மாற்று தீர்வை அரசு கோரியபோது, வேளாண் சங்கங்கள் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதிலேயே நிற்கின்றன.” எனக் கூறினார்.

“எங்கள் முன்மொழிவு விவசாயிகள் மற்றும் நாட்டின் நலனுக்காக இருப்பதால் அதை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டோம். நாளை அவர்களின் முடிவை தெரிவிக்கும்படி அவர்களிடம் கேட்டுள்ளோம்.” என மேலும் தெரிவித்தார்.

அவர்களின் எதிர்ப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் பல திட்டங்களை வழங்கியுள்ளது. ஆனால் போராட்டத்தின் உண்மையான காரணத்தை இழக்கும்போது எந்த தீர்மானமும் சாத்தியமில்லை என்று மத்திய அமைச்சர் கூறினார்.

உழவர் தலைவர்களில் ஒருவரான சிவ்குமார் கக்கா பேச்சுவார்த்தை முடிந்ததும் ஊடகங்களுடன் பேசியபோது, ​​”மதிய உணவு இடைவேளைக்கு முன்னர், விவசாயிகள் தலைவர்கள் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர். மேலும் அவர்கள் திருத்தங்களுக்கு தயாராக இருப்பதாக அரசாங்கம் கூறியது. அமைச்சர் எங்களிடம், அரசாங்கத்தின் முன்மொழிவை பரிசீலிக்கக் கோரிக்கை விடுத்தார். எங்கள் கருத்தை பரிசீலிக்கும்படி நாங்களும் அவரிடம் கேட்டோம். அதன் பிறகு, அமைச்சர் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.” எனக் கூறினார்.

மூன்று புதிய வேளாண் சட்டங்களில் கிட்டத்தட்ட இரண்டு மாத கால முட்டுக்கட்டைகளை உடைக்க, 11’வது சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், அது எந்த தீர்வும் இல்லாமல் முடிந்தது.

“அடுத்த கூட்டத்திற்கான தேதி எதுவும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படவில்லை” என்று பி.கே.யு கிரந்திகாரி (பஞ்சாப்) மாநிலத் தலைவர் சுர்ஜீத் சிங் புல் கூறினார்.

“அமைச்சர் எங்களை மூன்றரை மணி நேரம் காத்திருக்கச் செய்தார். இது விவசாயிகளுக்கு ஒரு அவமானம். அவர் வந்ததும், அரசாங்கத்தின் முன்மொழிவை பரிசீலிக்கும்படி கேட்டுக் கொண்டார், கூட்டங்களின் செயல்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதாகக் கூறினார். போராட்டம் அமைதியாக தொடரும்.” என்று கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவின் பிரதிநிதி  எஸ்.எஸ். பாந்தர் கூறினார்.

விஜியன் பவனில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே, வர்த்தக மற்றும் உணவு அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் 41 உழவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரசு மிகச் சிறந்த தீர்வை வைத்துள்ளது என்றும், இனி முடிவு விவசாய அமைப்புகளின் கையில் தான் என மத்திய வேளாண் அமைச்சர் கூறியிருப்பதன் மூலம், இதற்கு மேலும் பேச்சுவார்த்தையைத் தொடர மத்திய அரசு விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைந்துள்ளதால், நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை காத்திருக்க முடிவு செய்துளளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போதைக்கு போராட்டம் முடிவுக்கு வரும் அறிகுறி தெரியவில்லை.