தொடர் போராட்டம் எதிரொலி..! வேளாண் சட்டங்களை ஒரு வருடம் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்..?

20 January 2021, 7:44 pm
farmers_at_delhi_border_updatenews360
Quick Share

தற்போது டெல்லியில் உள்ள விஜியன் பவனில் மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் பத்தாவது சுற்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக நேற்று பேச்சுவார்த்தை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் வேளாண் அமைச்சகம் ஒரு நாள் தாமதப்படுத்தியது.

தற்போது பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், தேவைப்பட்டால் வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு ஒரு வருடம் காத்திருக்க அரசாங்கம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விவசாயிகள் இந்த திட்டத்தை நிராகரித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

டெல்லியின் எல்லைகளில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முந்தைய ஒன்பது சுற்று முறையான பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உறுதியான முடிவுகளையும் தரத் தவறிவிட்டன.

மூன்று சட்டத்திருத்தங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற அவர்களின் முக்கிய கோரிக்கையில் விவசாயிகள் தொடர்ந்து உறுதியாக உள்ளனர். மூன்று சட்டங்களையும் ரத்து செய்வதில் பிடிவாதமாக இருப்பதைத் தவிர, விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயிர்களை வாங்குவதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தையும் கோருகின்றனர்.

எனினும், அரசாங்கம் சட்டங்களை ரத்து செய்ய மறுத்துவிட்டது மற்றும் சட்டங்களை பிரிவு வாரியாக விவாதிக்க விவசாயிகளை வலியுறுத்துகிறது. தேவைப்பட்டால், சட்டங்களை திருத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதை உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தி, பிரச்சினையைத் தீர்க்க ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தாலும், விவசாயிகள் சங்கங்களுடனான பேச்சுவார்த்தைக்கான வழியை மத்திய அரசு தொடர்ந்து திறந்தே வைத்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சட்டங்களை ரத்து செய்வதைத் தவிர வேறு வழிகள் குறித்து விவசாயிகள் கலந்துரையாடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணியை நடத்த வேண்டாம் என்று விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தபோது, “விவசாயிகள் மாற்று வழிகளைப் பற்றி விவாதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தோமர் கூறினார்.

Views: - 0

0

0