தோல்வியில் முடிந்தது பேச்சுவார்த்தை..! போராட்டத்தை தொடர உள்ளதாக விவசாய அமைப்புகள் அறிவிப்பு..!

1 December 2020, 7:26 pm
Farmers_Govt_Meet_UpdateNews360
Quick Share

புதிய விவசாய சட்டங்கள் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று எந்த முடிவும் எட்டப்படாமலேயே முடிவுக்கு வந்தது. இதையடுத்து போராட்டம் தொடரும் என விவசாய அமைப்புகள் கூறியுள்ள நிலையில், அடுத்த சுற்று கூட்டம் டிசம்பர் 3 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் உள்ள விஜியன் பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் போது, ​​குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) மற்றும் விவசாய உற்பத்தி சந்தை குறித்து விவசாய அமைப்புகளின் தலைவர்கள் முன் விரிவான விளக்கக்காட்சியை மத்திய அரசு முன்வைத்தது.

புதிய விவசாய சட்டங்களைப் பற்றி விவாதிக்க விவசாயிகள் தங்கள் பிரதிநிதிகள், அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் விவசாய வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க அரசாங்கம் முன்வந்தது. ஆயினும், விவசாய அமைப்புகளின் தலைவர்கள் இந்த திட்டத்தை நிராகரித்தனர்.

“எங்கள் போராட்டம் தொடரும். நாங்கள் நிச்சயமாக அரசாங்கத்திடமிருந்து எதையாவது திரும்பப் பெறுவோம். அது தோட்டாக்கள் அல்லது அமைதியான தீர்வு என எதுவாக இருந்தாலும் சரி. எனினும் அவர்களுடன் மீண்டும் கலந்துரையாடலுக்கு வருவோம்” என்று அமைச்சர்கள் குழுவைச் சந்தித்த விவசாயிகள் குழு உறுப்பினர் சந்தா சிங் கூட்டத்திற்குப் பின் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த சந்திப்பு சாதகமான சூழ்நிலையில் நடைபெற்றது என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

“நாங்கள் டிசம்பர் 3’ம் தேதி மீண்டும் சந்திப்போம். விவாதங்களைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இன்று முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் ஒரு கூட்டத்தை நடத்தி, விவசாயிகள் போராட்டத்திற்கு முடிவு கட்டுவதற்கான தீர்வுகுறித்து விவாதித்தனர்.

இதற்கிடையில், மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற மாட்டோம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Views: - 16

0

0