எச்ஏஎல் தயாரிக்கும் போர் விமான தகவலை ஐஎஸ்ஐக்கு வழங்கிய ஊழியர்..! மகாராஷ்டிரா போலீஸ் கைது..!

By: Sekar
9 October 2020, 6:22 pm
HAL_UpdateNews360
Quick Share

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பிற்கு இந்திய போர் விமான விவரங்களை வழங்கியதற்காக அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) ஊழியரை மகாராஷ்டிரா போலீசார் இன்று கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரு அறிக்கையில், மகாராஷ்டிர போலீசின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு, குற்றம் சாட்டப்பட்டவர் இந்திய போர் விமானங்கள் மற்றும் அவற்றின் உற்பத்தி பிரிவு பற்றிய ரகசிய தகவல்களை ஐ.எஸ்.ஐ.’க்கு வழங்கியதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ உடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த அந்த நபர் குறித்து மாநில தீவிரவாத எதிர்ப்பு அமைப்பின் (ஏ.டி.எஸ்) நாசிக் பிரிவு நம்பகமான உளவுத்தகவலை பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் இந்திய போர் விமானங்கள் பற்றிய ரகசிய தகவல்களையும் அவற்றின் முக்கிய விவரங்களையும், நாசிக் அருகே ஓஜாரில் உள்ள எச்ஏஎல் விமான உற்பத்தி பிரிவு, ஏர்பேஸ் மற்றும் உற்பத்தி பிரிவுக்குளின் தடைசெய்யப்பட்ட பகுதி தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு வழங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

41 வயதான நபர் மீது அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாசிக் ஏடிஎஸ் பிரிவு அதிகாரிகள் அவரை நாசிக் நகரில் இருந்து கைது செய்தனர்.

அவரிடமிருந்து மூன்று மொபைல் போன்கள் மற்றும் ஐந்து சிம் கார்டுகள் மற்றும் இரண்டு மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொலைபேசிகள் மற்றும் சிம் கார்டுகள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் 10 நாட்கள் ஏடிஎஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

மிக் -21 எஃப்எல் விமானங்கள் மற்றும் கே -13 ஏவுகணைகளை தயாரிப்பதற்காக 1964’ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட எச்ஏஎல் நாசிக் பிரிவு, நாசிக்கிலிருந்து 24 கி.மீ தொலைவிலும், மும்பையிலிருந்து 200 கி.மீ தொலைவிலும் உள்ள ஓஜாரில் அமைந்துள்ளது.

இந்த பிரிவு மிக் -21 எம், மிக் -21 பிஐஎஸ், மிக் -27 எம் மற்றும் அதிநவீன சு -30 எம்.கே.ஐ போர் ஜெட் போன்ற பிற மிக் வகைகளையும் தயாரித்துள்ளது. இந்த பிரிவு மிக் தொடர் விமானங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சு -30 எம்.கே.ஐ விமானங்களின் பழுதுபார்ப்பு ஆகிய பணிகளையும் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Views: - 43

0

0