ஒருநாள் முதல்வர் ஆன மாணவி! அப்படி என்ன சாதித்தார் தெரியுமா?

24 January 2021, 9:47 am
Quick Share

முதல்வன் பட பாணியில், உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக ஸ்ரீஸ்தி கோஸ்வாமி என்ற கல்லூரி மாணவி ஒருவர் இன்று (ஜனவரி 24 ஆம் தேதி) பதவியேற்கிறார். அவர் அப்படி என்ன சாதனை செய்தார் தெரியுமா?

ஹரித்துவார் மாவட்டம், தவுலத்பூர் மாவட்டத்தில் வசிக்கும் ஸ்ரீஸ்தி கோஸ்வாமி, ரூர்கியில் உள்ள கல்லூரி ஒன்றில், இளங்கலை வேளாண்மை படித்து வருகிறார். இவரது தந்தை தொழிலதிபராகவும், தாய் இல்லதரசியாகவும் இருக்கின்றனர். மேலும், கோஸ்வாமி தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டமன்ற முதல்வராக பொறுப்பில் இருக்கிறார்.

குழந்தைகளின் மேம்பாட்டுக்காக, பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்து அசத்தி வரும் கோஸ்வாமியை கவுரவிக்கும் வகையில், உத்திரகாண்ட் மாநில அரசு, அவரை ஒருநாள் முதல்வராக்கி அழகு பார்க்கிறது. மேலும், இன்று (ஜனவரி 24) தேசிய பெண் குழந்தைகள் தினம் என்பதால், அவர்களை கொண்டாடும் வகையில், இந்த சிறப்பு முயற்சியை எடுத்துள்ளது. கோஸ்வாமிக்கு பதவியேற்பு விழாவும் நடைபெற உள்ளது.

உத்திரகாண்டின் கோடைகால தலைநகரான கெய்சனில் இருந்து, அவர் இன்று மாநிலத்தை நிர்வாகம் செய்ய இருக்கிறார். மாநில முதல்வராக பதிவி ஏற்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கோஸ்வாமி, ‘‘என்னால் இதனை நம்ப முடியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னால் முடிந்ததை ஆக்கப்பூர்வமாக செய்வேன். மக்களின் நலனுக்காக இளைஞர்களால் சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் எனது பணி இருக்கும்’’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒருவேளை முதல்வன் படத்தில் அர்ஜூன் செய்தது போல, அதிரடி நடவடிக்கையில் இறங்கி விடுவாரோ…? நல்லது நடந்தால் சரி என்கிறீர்களா…