காரில் ஹவாலா பணம் கடத்த முயற்சி : 4 பேர் கைது!!

9 September 2020, 3:55 pm
Hawal seized - updatenews360
Quick Share

ஆந்திரா : விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத்துக்கு ஹவாலா பணம் கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்து ரூ1.47 கோடி பணம் மற்றும் 34 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடா காவல்துறை ஆணையாளர் சீனிவாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது விஜயவாடா பவானிபுரம் காவல் நிலைய உதவி ஆணையாளர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் வர்மா தலைமையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது காரின் பின்புறத்தில் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பையை திறந்து சோதனை செய்தனர்.

அப்போது அதில் ரூ.1.47 கோடி பணம், 34 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. காரில் இருந்த மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரத்தை சேர்ந்த ஆனந்ராவ் மற்றும் ஹரிபாபு ஆகியோரை பிடித்து விசாரணை செய்யப்பட்டது.

விசாரனையில் நரசாபுரத்தை சேர்ந்த தேவி ஜுவல்லரி உரிமையாளர் பிரவீன் தன்னிடமுள்ள ரூ.50 லட்ச ரூபாய் பணம் மற்றும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 34 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றை கொடுத்ததுடன் விஜயவாடாவில் உள்ள தனது நண்பர்களான சிவானந்தம் என்பவரிடம் ரூ 50 லட்ச ரூபாய், பரத் என்பவரிடம் ரூ 20 லட்சம், உத்தம் என்பவரிடம் ரூ.15 லட்ச ரூபாய், திவாகர் என்பவரிடம் ரூ 12 லட்ச ரூபாய் ஆகியவற்றை வாங்கி மொத்தம் ரூ.1.47 கோடி பணம், 34 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றை கொண்டு சென்று ஐதராபாதில் உள்ள தனது சகோதரர் கீர்த்தியிடம் கொடுக்க உள்ளதாக கூறினார்.

அதன்படி நாங்கள் பணத்தை வாங்கி எடுத்து செல்கிறோம் என்று ஆனந்த் ராவ், ஹரிபாபு ஆகியோர்தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பிரவீன், சிவானந்தம், ஆனந்ராவ், ஹரிபாபு ஆகிய 4 பேரை கைது செய்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் டாலர்களை வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்து ஒப்படைத்தனர். பரத், திவாகர், உத்தம் ஆகியோரை போலீசார் தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 14

0

0