கேரளாவை புரட்டி போட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு : முதலமைச்சர் பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2021, 6:53 pm
Modi Pinarayi - Updatenews360
Quick Share

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி காயமடைந்தவர்கள் மற்றும் துயரமடைந்தவர்களுக்கு உதவ அதிகாரிகள் தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த இரு தினங்களாக பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக கேரளாவில் மத்திய பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

இதனால்,குறிப்பாக பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அப்பகுதிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழையால் இடுக்கி மற்றும் கோட்டயம் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, தற்போது வரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கேரளாவில் மீட்பு படையினர் துரிதமாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையிடம் உதவி கேட்கப்பட்டுள்ளதாகவும், முடிந்த அளவுக்கு மக்களை காப்பாற்ற முயற்சித்து வருவதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதனையடுத்து,கேரளாவின் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக நடுத்தர லிப்ட் ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

மேலும்,”கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளாவின் சில பகுதிகளில் நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவைப்படும் மக்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ NDRF குழுக்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன. அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறேன்”,என்றுமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சிலர் உயிரிழந்திருப்பது வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சிலர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது.துயரமடைந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மேலும்,கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவின் பின்னணி மற்றும் நிலைமையை, அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் பேசி விவாதித்தேன்.காயமடைந்தவர்கள் மற்றும் துயரமடைந்தவர்களுக்கு உதவ அதிகாரிகள் தயாராக உள்ளனர்.அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 193

0

0