தெலங்கானாவில் தொடர்ந்து பெய்யும் அடைமழை: வயல்வெளிகளில் சிக்கி கொண்டவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு…

15 August 2020, 11:09 pm
Quick Share

தெலுங்கானா: தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்யும் அடைமழை காரணமாக வயல்வெளிகளில் சிக்கி கொண்டவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணி நடைபெற்றது.

கடந்த இரண்டு நாட்களாக தெலங்கானாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியவை நிரம்பி ஆறுகள், கால்வாய்கள் ஆகியவற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.

தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்டிருக்க வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து அவற்றில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாநிலத்திலுள்ள பூபாலபள்ளி மாவட்டத்தில் ஓடும் சலிவாகு ( சலிகால்வாய்) வெள்ள நீர் காரணமாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சலிவாகு இரு பக்கங்களிலும் உள்ள கிராமங்கள், வயல்கள் ஆகியவற்றை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சலிவாகு கால்வாய் சமீபத்தில் இருக்கும் வயல்களில் வேலை செய்வதற்காக 12 பேர் இன்று காலை சென்றிருந்தனர்.

அந்தப்பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்து கொண்ட காரணத்தால் அவர்கள் அங்கிருந்து வெளியில் வர இயலவில்லை. அவர்களை அங்கிருந்து மீட்பதற்காக எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. எனவே இறுதியாக இரண்டு ஹெலிகாப்டர் மூலம் 12 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதேபோல் சித்திபேட்டை மாவட்டத்தில் உள்ள பெத்தவாகு ( பெரிய கால்வாய்) மழை வெள்ளம் காரணமாக ஆர்ப்பரித்து ஓடுகிறது. இன்று மதியம் அந்த வழியாக வந்த லாரி ஒன்று பெத்தவாகு கால்வாயில் ஓடும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

லாரியுடன் அடித்து செல்லப்பட்ட டிரைவர் சங்கர் கால்வாய் நடுவில் இருக்கும் மரத்தின் கிளை ஒன்றை பிடித்து தொங்கி கொண்டிருந்தார்.அவரை படகு மூலம் மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்த நிலையில் அவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட கயிறை சரியாக கட்டி கொள்ளாத காரணத்தால் ஓடும் தண்ணீரில் விழுந்து அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்கப்பட்டார்.

Views: - 24

0

0