இனி குழந்தைகளுக்கு தலைக்கவசம் கட்டாயம்…அதிகபட்ச வேகம் 40 கி.மீ: அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை..!!

Author: Aarthi Sivakumar
27 October 2021, 9:08 am
Quick Share

புதுடெல்லி: இருசக்கர வாகனத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்வோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

இருசக்கர வாகனங்களில் குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 129, 09.08.2019 தேதியிட்ட மோட்டார் வாகனங்கள் சட்டம் 2019 மூலம் திருத்தப்பட்டுள்ளது.

இப்பிரிவில் உள்ள இரண்டாவது விதியின் படி, மோட்டார் சைக்கிளில் செல்லும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு விதிகளுக்குட்பட்டு எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

21 அக்டோபர் 2021 தேதியிட்ட ஜிஎஸ்ஆர் 758(ஈ)-யின் படி வரைவு விதிகளை உருவாக்கியுள்ள சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், சில கட்டப்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் செல்லும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை மோட்டார் சைக்கிள் ஓட்டுபவருடன் பட்டை போன்ற பாதுகாப்பு அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் வாயிலாக குழந்தை, இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுவது முழுமையாக தடுக்கப்படும்.

பின்னால் அமர்ந்து செல்லும் 9 மாதங்கள் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் தலை கவசம் அணிந்திருப்பதை ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும். பிஐஎஸ்-ஆல் பரிந்துரைக்கப்பட்ட அம்சங்கள் கொண்ட பாதுகாப்பான தலை கவசங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

4 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் செல்லும் மோட்டார் சைக்கிளின் வேகம் மணிக்கு 40 கிமீக்கு மேல் இருக்கக்கூடாது. இந்த விதிகள் தொடர்பாக ஆட்சேபணை மற்றும் கருத்துகள் பதிவு செய்ய விரும்புவோர் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Views: - 259

0

0