ஆறுகள் மற்றும் கடல்களில் டால்பின்களை பெருக்க சிறப்புத் திட்டம்..! மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு..!
17 August 2020, 7:06 pmஇந்தியாவின் ஆறுகள் மற்றும் பெருங்கடல்களில் டால்பின்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இன்னும் 15 நாட்களில் முழுமையான டால்பின் திட்டம் ஒன்றை தொடங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்தார்.
“74 வது சுதந்திர தினத்தில் பிரதமர் அறிவித்தபடி, ஆறுகள் மற்றும் நாட்டின் பெருங்கடல்களில் டால்பின்களின் பாதுகாப்பு மற்றும் எண்ணிக்கை அதிகரிப்பிற்காக, சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இன்னும் 15 நாட்களில் ஒரு முழுமையான டால்பின் திட்டத்தை தொடங்கவுள்ளது” என்று ஜவடேகர் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் மாநில வனத்துறை அமைச்சர் கூட்டத்தில் மீண்டும் காம்பா நிதியை காடு வளர்ப்பு மற்றும் தோட்டக்கலைக்கு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சம்பளம், பயண கொடுப்பனவுகள், மருத்துவ செலவுகள் போன்றவற்றுக்கு காம்பா நிதி பயன்படுத்தப்படக்கூடாது என்பதை வலியுறுத்தியதாக அவர் மேலும் கூறினார்.
காம்பா நிதி என்பது காடு வளர்ப்பு மற்றும் தோட்டக்கலை மேம்பாட்டிற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் திட்டமாகும்.