“விளையாட்டுத்துறையில் இளம்திறமையாளர்களை வளர்ப்பதில் பிரதமர் மோடி அரசு உறுதிபூண்டுள்ளது” : அமைச்சர் அமித்ஷா ட்வீட்..!

29 August 2020, 11:19 am
Quick Share

தேசிய விளையாட்டு நாளையோட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த “தியான் சந்த்” பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதியை “இந்திய தேசிய விளையாட்டு நாளாக” மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் ஆண்டுதோறும் விளையாட்டுத்துறையை சேர்ந்வர்களை கவுரவிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாக உள்ளது.

மேலும், தேசிய விளையாட்டு நாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி, குடியரசுத் தலைவரால், விளையாட்டு துறைகளில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு, ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, மற்றும் துரோணாச்சாரியார் போன்ற விருதுகள் வழங்கப்படுகிறது.

இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய தேசிய விளையாட்டு தினமான இன்று, தங்கள் கடின உழைப்பின் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

கெலோ இந்தியா & ஃபிட் இந்தியா போன்ற சிறந்த முயற்சிகள் மூலம், விளையாட்டுகளை ஊக்குவிப்பதிலும், இளம் திறமையாளர்களை வளர்ப்பதிலும் பிரதமர் மோடி அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.