14 வயதிலேயே பட்டப்படிப்பு முடிச்சாச்சா..? அசத்திய ஹைதராபாத் சிறுவன்..!

21 November 2020, 10:09 am
agastya_jaiswal_updatenews360
Quick Share

ஹைதராபாத்தைச் சேர்ந்த பதினான்கு வயது சிறுவன் அகஸ்திய ஜெய்ஸ்வால், இளம் வயதிலேயே பட்டப்படிப்பை முடித்த இந்தியாவின் முதல் மாணவர் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார். ஜெய்ஸ்வால் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம் பட்டம் முடித்துள்ளார்.

தெலுங்கானாவில் 9 வயதில் 7.5 ஜி.பி.ஏ. உடன் 10’ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் சிறுவன் தான் தான் என்று ஜெய்ஸ்வால் கூறினார். பின்னர் 11 வயதில் அகஸ்தியா ஜெய்ஸ்வால் தெலுங்கானாவில் 12’ஆம் வகுப்பில் 63% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து அகஸ்திய ஜெய்ஸ்வால் ஹைதராபாத்தின் செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பில் இணைந்தார்.

“இந்தியாவில் வெறும் 14 வயதில் பி.ஏ. முடித்த முதல் பையனாக நான் மாறிவிட்டேன். 11 வயதில், தெலுங்கானாவில் 63 சதவீதத்துடன் 12’ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் பையனும் நான் தான்” என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

அகஸ்தியா ஒரு தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் வீரரும் கூட. அவர் 1.72 வினாடிகளில் a-z வரை தட்டச்சு செய்யும் திறமையையும் பெற்றுள்ளார். அகஸ்திய இரு கைகளாலும் எழுதுவதிலும் வல்லவர்.

“என் பெற்றோர எனது ஆசிரியர். அவர்களின் ஆதரவோடு, எதுவும் சாத்தியமற்றது என்பதை நிரூபிக்கும் சவால்களை நான் சமாளித்து வருகிறேன். 1.72 வினாடிகளில் நான் A முதல் Z எழுத்துக்களை தட்டச்சு செய்வேன். 100 வரை பெருக்கல் அட்டவணைகளை என்னால் சொல்ல முடியும். இரு கைகளாலும் எழுத முடியும். நான் ஒரு சர்வதேச ஊக்க பேச்சாளர்.” என்று அவர் கூறினார். “நான் ஒரு டாக்டராக விரும்புகிறேன். எனவே நான் அடுத்து மருத்துவம் படிப்பேன்.” என்று அவர் மேலும் கூறினார்.

அவரது தந்தை அஸ்வினி குமார் ஜெய்ஸ்வால், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறப்புத் தரம் உள்ளது என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தினால், ஒவ்வொரு குழந்தையும் வரலாற்றை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.

தாய் பாக்யலட்சுமி, “நாங்கள் எப்போதும் அவரிடம் பாடங்களைப் புரிந்து கொள்ளும்படி கூறுவோம். அவர் எப்போதும் எங்களிடம் கேள்விகளைக் கேட்கிறார். நாங்கள் அவருக்கு நடைமுறையில் பதிலளிக்கிறோம்.” என்று கூறினார்.

இதற்கிடையே மிகக் குறைந்த வயதில் பட்டம் பெற்றுள்ள அவருக்கு, அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Views: - 21

0

0