2020’ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 80 சதவீதத்திற்கும் மேல் குறைந்த கல்வீச்சு சம்பவங்கள்..! மத்திய அரசு தகவல்..!

8 February 2021, 8:35 pm
Srinagar_Protests_UpdateNews360
Quick Share

ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டு வருவதால் வன்முறை சம்பவங்கள் குறைந்து வருவதுடன், அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருவதாக உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.

யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் கல் வீசும் சம்பவங்கள் 2019’இல் 2,009 ஆக இருந்த நிலையில், 2020’ல் 327’ஆக குறைந்துள்ளதாகவும், வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 2020’ஆம் ஆண்டில் 221’ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதே சமயம் பாகிஸ்தானில் இருந்து போர்நிறுத்த மீறல்கள் அதிகரித்துள்ளன என்று கிஷன் ரெட்டி கூறினார்.

“ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சி பாதையில் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் 370’வது பிரிவைக் கேட்கவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்கள் இளைஞர்கள் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை விரும்புகிறார்கள்.

பாகிஸ்தான் அடிக்கடி ஊடுருவ முயற்சிக்கிறது மற்றும் கட்டுமான மற்றும் மேம்பாட்டு பணிகளை நிறுத்த போர்நிறுத்தத்தை மீறுகிறது.” என்று அவர் கூறினார்.

2019’இல் 216 ஊடுருவல் முயற்சிகள் நடந்தன. ஆனால் அது 2020’இல் 99’ஆக குறைந்துள்ளது என்று அவர் கூறினார். பயங்கரவாத வன்முறைகளும் 2019’ல் 594’ஆக இருந்த நிலையில் 2020’ல் 244’ஆக குறைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் அபிவிருத்திப் பணிகள் சரியான திசையில் முன்னேறி வருவதை வலியுறுத்தி, கிஷன் ரெட்டி, ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில், எய்ம்ஸ் அளவிலான இரண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் தலா ரூ 2,000 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

பிரதமர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட தொகையில் 881 கோடி ரூபாயை ஜம்மு-காஷ்மீர் பெற்றுள்ளது என்று அவர் கூறினார். மேலும் ஜம்முவில் இரண்டு புற்றுநோய் மருத்துவமனைகள் அமைக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

Views: - 0

0

0