ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!!

16 July 2021, 9:54 am
Quick Share

திருவனந்தபுரம்: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் இன்று திறக்கப்படுகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாத பூஜைக்காக 16ம் தேதி இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார்.

இதனை தொடர்ந்து 21ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். பூஜை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்பு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம், இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Sabarimalai Closed- updatenews360

தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு 17ம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான ஆன்லைன் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

இந்த சான்றிதழ்கள் அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் பரிசோதனை நிலக்கல்லில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 146

0

0