“சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை” முழக்கம்..! பால கங்காதர திலகரின் நூறாவது நினைவு தினம் இன்று..!

1 August 2020, 1:28 pm
lokmanya_tilak_updatenews360
Quick Share

சுதந்திர போராட்ட வீரர் லோக்மான்ய பால கங்காதர திலகரின் நூறாவது நினைவு நாளை நினைவு கூர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திலக் தனது முழு வாழ்க்கையையும் இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்காக அர்ப்பணித்தார் என்று கூறினார்.

“சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை. அதை நான் அடைந்தே தீருவேன்.” என 19’ஆம் நூற்றாண்டில் முழங்கி, அதை அடைய முழு வாழ்க்கையையும் செலவழிப்பது பலரால் செய்ய முடியாத காரியம். இந்த வாக்கியம் எப்போதும் லோக்மான்ய திலகரோடு நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களுடன் பொறிக்கப்பட்டிருக்கும்” என்று இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ஐ.சி.சி.ஆர்) ஏற்பாடு செய்த ஒரு வெபினாரில் திலகருக்கு அஞ்சலி செலுத்தும் போது அமித் ஷா கூறினார்.

முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் திலகருக்கு அஞ்சலி செலுத்தினார், நாட்டின் சுதந்திரப் போராட்டம் மற்றும் வரலாற்றில் திலகரின் அழியாத பங்களிப்பை அதில் நினைவு கூர்ந்தார்.

“லோக்மான்ய பால கங்காதர திலகர் ஜி சுதந்திர இயக்கத்திற்கு ஒப்பிடமுடியாத பங்களிப்பைக் கொண்டுள்ளார். தனது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் தேசத்திற்காக அர்ப்பணித்து, ஒரு கருத்தியல் தலைமுறை புரட்சியாளர்களை உருவாக்கினார்” என்று ஷா ட்வீட் செய்துள்ளார்.

“அவர் தீண்டாமையின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தார். சாதி மற்றும் பிரிவுகளின் அடிப்படையில் பிளவுபட்டுள்ள சமூகத்தை ஒன்றிணைக்க ஒரு பெரிய இயக்கத்தைத் தொடங்கினார்.” என்று மேலும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியும் திலக்கின் நூறாவது ஆண்டு நினைவு நாளை நினைவுகூர்ந்து அவரது வீர வாழ்க்கை குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

திலகரின் புத்திகூர்மை, தைரியம், நீதி உணர்வு மற்றும் சுயராஜ்ஜியத்தின் யோசனை தொடர்ந்து ஊக்கமளிப்பதாக பிரதமர் தன்னுடைய டிவீட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி.ஆர் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான வினய் சஹஸ்ராபுதே, திலகரை அடையாள பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை பாராட்டும் நவீன இந்தியாவின் முதல் அரசியல் தலைவர் என்று வர்ணித்தார். திலகர் முழுமையான சுதந்திரத்திற்கு ஒரு தெளிவான அழைப்பை விடுத்தார். சுதேசி என்பது திலகரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்.

“இன்று, ஆத்மநிர்பர் பாரத் பற்றி நாம் பேசும்போது, திலகரின் மரபு முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு பொருளாதார தேசியவாதத்தின் உணர்வை புதுப்பிப்பது மற்றும் கலாச்சாரத்தின் மூலம் சமூக ஒருங்கிணைப்புக்கு பாடுபடுவது திலகரின் மூலோபாயத்தின் அம்சங்களாகும். ஆகஸ்ட் 1’ம் தேதி அவரது 100’வது ஆண்டுநினைவு தினத்தைக் கடைப்பிடிக்கும்போது அவை இன்றும் பொருத்தமாக இருக்கின்றன.” என்று சஹஸ்ராபுதே குறிப்பிட்டார்.