புதுவை, பீகார், உ.பி.யிலும் இண்டி கூட்டணி ‘டமார்’ ஆகிறது… காங்கிரசை கழற்றிவிடும் கூட்டணி கட்சிகள்…?தமிழகத்திலும் எதிரொலிக்குமா…?

Author: Babu Lakshmanan
25 January 2024, 9:47 pm
Quick Share

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை எப்படியும் வீழ்த்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து அமைத்த இண்டியா கூட்டணி பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லி நகரங்களில் ஒன்று கூடி தீவிர ஆலோசனையும் நடத்தின.

அப்போது காங்கிரஸ் வலுவாக இல்லாத மேற்கு வங்கம், டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், தமிழகம், மராட்டிய மாநிலங்களில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் எத்தனை தொகுதிகளை ஒதுக்கும்? அதை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமா?.. என்ற கேள்விகளும் எழுந்தன. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் கூட இப்பிரச்சனைக்கு நாங்கள் எளிதில் தீர்வு கண்டு விடுவோம் என இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கூறியும் வந்தனர்.

ஆனால் அதற்கு நேர் மாறாக கூட்டணி அமைந்து முழுமையாக இன்னும் 7 மாதங்களே கூட ஆகாத நிலையில் தொகுதி பங்கீடு விஷயத்தில் இந்த கட்சிகளுக்குள் முட்டல் மோதல் பூதாகரமாக வெடித்து உள்ளது.

குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும், ஆம் ஆத்மி பஞ்சாபிலும் காங்கிரசுடன் கூட்டணி சேர விரும்பாமல் தனித்துப் போட்டியிடப் போவதாக அதிரடி காட்டியிருக்கின்றன. இதற்கு சில பின்னணி காரணங்களும் உண்டு.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிமுணால் காங்கிரஸ் 22, பாஜக 18, காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி கண்டிருந்தன.

அதேநேரம் 2021ல் நடந்த மாநில தேர்தலில் மம்தாவின் கட்சி மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 215ஐ கைப்பற்றியது. ஏற்கனவே மாநிலத்தை ஆண்ட மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. மாறாக 2016 தேர்தலில் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக 77 இடங்களை அள்ளியது.

ஒரே தேர்தலில் மேற்குவங்கத்தில் விஸ்வரூபம் எடுத்த பாஜகவை நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்தவேண்டும் என்றால் 2019 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
பெற்ற அதே இரண்டு தொகுதிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், மற்ற நாற்பதிலும் நாங்கள் போட்டியிடுகிறோம் என்று மம்தா திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதற்கு மாநில காங்கிரஸ் தலைமை சம்மதிக்கவில்லை. எங்களுக்கும், மார்க்சிஸ்ட்க்கும் எட்டு இடங்களை கொடுங்கள். எஞ்சிய 34 தொகுதிகளில் உங்கள் கட்சி போட்டியிட்டும் என்று கேட்டுக் கொண்டது.

ஆனால் மாநிலத்தில் முழுமையாக செல்வாக்கை இழந்துவிட்ட இந்த இரண்டு கட்சிகளுக்கும் எட்டு இடங்கள் என்பது மிக மிக அதிகம். தவிர பாஜகவிடம் இந்த கட்சிகள் தோற்றுவிட்டால் அது தனது கட்சியின் இமேஜையும் காலி செய்துவிடும் என்று அஞ்சிய மம்தா வருவது வரட்டும் என்று தனித்துப் போட்டியிடுவதாக தடாலடியாக அறிவித்தும் விட்டார்.

அதேபோல பஞ்சாபில் 2022ம் ஆண்டு கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களில் அமோக வென்று ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின்பு அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பகவந்த் மான் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றே தொடர்ந்து கூறி வந்தார். ஆம் ஆத்மி இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருப்பது பற்றி அவர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

மம்தா தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில மணி நேரங்களில் பகவந்த் மானும் பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும். காங்கிரசுடன் எங்களுக்கு எந்த ஒட்டும் இல்லை, உறவும் கிடையாது என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.

இதேபோன்ற இடியாப்ப சிக்கல் உத்தரபிரதேசத்திலும் காணப்படுகிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் இருவரும் போட்டியிடுவதற்கு ஏற்றாற்போல் அமேதி, ரேபரேலி தொகுதிகளை விட்டுத் தருகிறோம், வேறு எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்று கூறி வருகிறது. ஆனால் காங்கிரசோ எங்களுக்கு 7 தொகுதிகளுக்கு குறையக் கூடாது என்று நிபந்தனை விதிக்கிறது. இதனால் இந்த மாநிலத்திலும் இண்டியா கூட்டணியில் இருந்து சமாஜ்வாடி விலகி தனித்துப் போட்டியிடும் நிலை உருவாகி உள்ளது.

இதேபோல மராட்டியம், பீகார் மாநிலங்களிலும் காங்கிரசுக்கு குறைவான தொகுதிகளையே ஒதுக்குவதற்கு தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மற்றும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இந்த மாநிலங்களில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இண்டியா கூட்டணி கட்சிகளிடையே அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை.

இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரசால் தலா 12 தொகுதிகளுக்கு மேல் கேட்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. இதைவிட கூடுதல் தொகுதிகளை கேட்டால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழற்றி விடப்படும் சூழல்தான் தென்படுகிறது.

இதனிடையே புதுச்சேரி தொகுதி யாருக்கு என்பது திமுக- காங்கிரஸ் இடையே பெரும் சிக்கலாக உருவெடுத்து இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் எப்படியாவது புதுச்சேரியை காங்கிரஸ் கேட்டுப் பெற்றுவிடுவது வழக்கம். இதனை புதுச்சேரி திமுக நிர்வாகிகளும் அதிருப்தியுடனேயே ஏற்றுக் கொள்கின்றனர். இம்முறை தொடக்கத்திலேயே திமுக நிர்வாகிகள், புதுச்சேரி தொகுதியை காங்கிரசுக்கு விட்டுத்தரவே கூடாது என்று தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக, தமிழக காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சு வரும் 28-ந் தேதி சென்னையில் நடக்கிறது. அப்போது காங்கிரசுக்கு 8 அல்லது 9 தொகுதிகளை ஒதுக்க திமுக முன் வரலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியோ 15 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. அதேநேரம் திமுக கூட்டணிக்குள் பாமக வந்தால் காங்கிரஸுக்கு 4 அல்லது 5 தொகுதிகள்தான் கிடைக்கும். இதனை அக் கட்சி ஏற்குமா? என்பது தெரியவில்லை.

புதுவையில் திமுக போட்டியிட முடிவெடுத்தாலும், தமிழகத்தில் காங்கிரசுக்கு நான்கைந்து தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டாலும் இண்டியா கூட்டணி இரண்டாகப் பிளவுபடும் அபாயம் உருவாகும். இது போன்ற நிலையில் காங்கிரஸ் தனித்தும் விடப்படலாம்.

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசுக்கு இடி மேல் இடி விழுவதால் அது அகில இந்திய அளவில் பாஜகவுக்கு சாதகமாக அமைந்து 350 தொகுதிகள் வரை
அக் கட்சி கைப்பற்றி மோடி அரசு ஹாட்ரிக் அடிக்க உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஏனென்றால் பாஜகவுடன் காங்கிரஸ் 325-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டால் அதில் பாஜக மட்டும் 275 இடங்களை எளிதில் கைப்பற்றி விடும். அதேபோல் இண்டியா கூட்டணி கட்சிகளையும் 75 க்கும் அதிகமான தொகுகளில் பாஜக வீழ்த்திவிடும் என்பது மூத்த அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.

அதேநேரம் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என நான்கு முனை போட்டி ஏற்பட்டால் அதிமுகவும், பாஜகவும் அதிக தொகுதிகளை கைப்பற்றுவதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்து விடும், என்றே சொல்லவேண்டும்.

ஆனால் திமுக நான்கு தொகுதிகளை ஒதுக்கினாலும் கூட அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மன நிலையில்தான் காங்கிரஸ் தலைவர்களான கே எஸ் அழகிரி,
ஈ வி கே எஸ் இளங்கோவன், கேவி தங்கபாலு, திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ் இருப்பதாக கூறப்படுவதால் தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.

என்ன நடக்கப் போகிறது, என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 413

0

0