ராணுவத் தளபதிகள் மட்டத்திலான 7’வது கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடக்கம்..! முடிவுக்கு வருமா இந்திய-சீன மோதல்..?

Author: Sekar
12 October 2020, 9:41 am
India_China_Military_Level_Talks_UpdateNews360
Quick Share

கிழக்கு லடாக்கின் சுஷூலில், எல்லைப்பகுதியில் அத்துமீறும் சீன நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இந்தியாவும் சீனாவும் ஏழாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர்-நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தும். கூட்டம் இன்று மதியம் 12 மணிங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

14 கார்ப்ஸ் கமாண்டராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து கொண்டிருக்கும் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் அவருக்கு அடுத்து அந்த பதவியை ஏற்க உள்ள லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.கே மேனன் ஆகியோர் இந்தியத் தரப்பில் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்கள். 

மேலும் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் நவீன் ஸ்ரீவாஸ்தவாவும் இதில் கலந்து கொள்வார். மொத்தத்தில், இது 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக இருக்கும். இதில் ஐ.டி.பி.பி ஐ.ஜி. தீபம் சேத், பிரிக் தளபதிகள் மற்றும் 2 சீன மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர்.

“லடாக்கில் இரு தரப்பினருக்கும் இடையிலான அனைத்து மோதல் பகுதிகள் குறித்தும் விவாதிக்க இந்தியா கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அங்கிருந்து சீன ராணுவம் முழுமையாக பின்வாங்க வேண்டும்” என்று அரசாங்க வட்டாரங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளன. பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் உள்ள புதிய மோதல் பகுதிகள் குறித்து மட்டுமே முதலில் விவாதிக்கப்பட வேண்டும் என்று சீனத் தரப்பு கோரியுள்ளது. ஆனால் இந்தியா முழுப் பகுதி குறித்தும் விவாதிக்க விரும்புகிறது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மலை உச்சிகளில் வெப்பநிலை மற்றும் சர்ச்சைக்குரிய இந்தியா-சீனா எல்லையில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி செல்சியஸாக குறைந்துவிட்டதால், இப்பகுதியில் இரு தரப்பினரால் குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான துருப்புக்களுக்கு வானிலை இப்போது ஒரு புதிய சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும் சீனாவும் செப்டம்பர் 21’ஆம் தேதி 6’வது சுற்று இராணுவத் தளபதி மட்டக் கூட்டத்தை நடத்தியிருந்தன. இரு தரப்புக்கும் இடையே ஆறு மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் இது வரை தீர்க்கமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 66

0

0