ஐநாவின் முக்கிய பதவியைக் கைப்பற்றியது இந்தியா..! பட்ஜெட் ஆலோசனைக் குழுவிற்கு தேர்வு..!

7 November 2020, 9:13 pm
Vidhisha_Maitra_UpdateNews360
Quick Share

ஐநா சபையில் நடந்த ஒரு முக்கியமான தேர்தலில், இந்திய இராஜதந்திரி விதிஷா மைத்ரா வெற்றி பெற்று, ஐநாவின் நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகள் தொடர்பான ஆலோசனைக் குழுவிற்கு (ஏசிஏபிகியூ) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆசிய பசிபிக் குழுமத்தின் சார்பில் குழுவில் உள்ள ஒரே பதவிக்கு இந்தியாவின் வேட்பாளராக விதிஷா மைத்ரா இருந்தார். மற்றொரு வேட்பாளர் ஈராக்கைச் சேர்ந்தவர். இந்நிலையில் விதிஷா மைத்ரா 126 வாக்குகள் பெற்று 52 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

1946’ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து இந்தியா இந்த குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறது. ஐநாவின் நிதி மற்றும் பட்ஜெட்டை கட்டுப்படுத்துவதால் இந்த குழு ஐக்கிய நாடுகள் அமைப்பில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் நிலையில்,இந்த மதிப்புமிக்க குழுவில் இந்தியாவின் வெற்றி மிக முக்கியமானது.

ஐ.நா. பொதுச்செயலாளர் பொதுச் சபைக்கு சமர்ப்பித்த வரவுசெலவுத் திட்டத்தை ஆராய்வது மற்றும் அதைக் குறிப்பிடும் நிர்வாக மற்றும் பட்ஜெட் விஷயங்களில் பொதுசபைக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பல செயல்பாடுகளைஏசிஏபிகியூசெய்கிறது. உறுப்பு நாடுகளின் வளங்கள் பயன்படுத்துவது குறித்தும், உத்தரவுகளுக்கு ஏற்ப முறையாக நிதியுதவி வழங்கப்படுவதை உறுதி செய்வதிலும் ஏசிஏபிகியூவின் முக்கியமான பணியாகும்.

பரந்த புவியியல் பிரதிநிதித்துவம், தனிப்பட்ட தகுதிகள், அனுபவம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான சேவை ஆகியவற்றின் அடிப்படையில் 193 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய பொதுச் சபையால் இதன் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில் உள்ள உறுப்பினர்கள் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தாமல், தனிப்பட்ட திறனுடன் பணியாற்றுகிறார்கள்.

விதிஷா மைத்ரா தற்போது நியூயார்க்கில் உள்ள ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர மிஷனில் முதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 11 ஆண்டுகளில் புது டெல்லி, பாரிஸ், போர்ட் லூயிஸ் மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

மூலோபாய கொள்கை திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டு உதவி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல், பாதுகாப்பு கையகப்படுத்தல் விஷயங்கள், சர்வதேச வரிவிதிப்பு சிக்கல்கள், முதலீடு மற்றும் வர்த்தக மேம்பாடு ஆகியவற்றில் விதிஷா மைத்ரா விரிவான பணி அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 28

0

0

1 thought on “ஐநாவின் முக்கிய பதவியைக் கைப்பற்றியது இந்தியா..! பட்ஜெட் ஆலோசனைக் குழுவிற்கு தேர்வு..!

Comments are closed.