ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து நடத்தப்பட்ட பிரம்மோஸ் கப்பல் ஏவுகணை சோதனை வெற்றி..! (வீடியோ)

18 October 2020, 3:31 pm
BrahMos_Missile_Test_UpdateNews360
Quick Share

உள்நாட்டில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து, அரபிக் கடலில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்து, பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையை இந்திய கடற்படை, இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

ஏவுகணை உயர் மட்ட மற்றும் மிகவும் சிக்கலான சூழ்நிலையில் இலக்கை மிகவும் துல்லியமாகத் தாக்கியது. பிரதான தாக்குதல் ஆயுதமாக பிரம்மோஸ் கப்பல் ஏவுகணை, நீண்ட தூர இலக்குகளைத் தாக்குவதன் மூலம், கடலில் இந்தியாவை வெல்லமுடியாத தன்மையை உறுதி செய்யும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் கடுமையான எல்லை மோதலில் இருக்கும் நேரத்தில் பிரம்மோஸ் ஏவுகணையின் சோதனை இந்தியாவுக்கு வலு சேர்த்துள்ளது.

ராணுவம், விமானம் மற்றும் கப்பல் என அனைத்து பாதுகாப்புப் படைகளிலும் செயல்படும் வகையில் பிரம்மோஸ் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து வடிவமைத்து, உருவாக்கியுள்ளது.

டி.ஆர்.டி.ஓ, பிரம்மோஸ் மற்றும் இந்திய கடற்படை வெற்றிகரமாக இந்த சோதனையை நடத்தியதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

டிஆர்டிஓ தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி, விஞ்ஞானிகள் மற்றும் டிஆர்டிஓ, பிரம்மோஸ், இந்திய கடற்படை மற்றும் தொழில்துறையின் அனைத்து பணியாளர்களுக்கும் வெற்றிகரமான சாதனையை நிகழ்த்தியதற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்திய ஆயுதப் படைகளின் திறன்களுக்கு பல வழிகளில் வலு சேர்க்கும் என்று அவர் கூறினார்.

Leave a Reply