இனி நீட் தேர்வுக்கு பதிலாக இனி-செட் தேர்வு..! இதென்ன புதுக் குழப்பம்..?

18 November 2020, 10:35 am
NEET_Exam_UpdateNews360
Quick Share

நாடு முழுவதும் மருத்துவ பட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வும், முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு பிஜி-நீட் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, இனி-செட் (Institute of National Importance Combined  Entrance Test) எனும் தேர்வை மத்திய அரசு நடத்த உள்ளதாக நேற்றிலிருந்து சமூக ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு :
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், மத்திய அரசு நாடு முழுவதும் நீட் தேர்வை இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தி வருகிறது. மருத்துவ பட்டப்படிப்பிற்கு நடத்தப்படும் இந்த தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழகம் நீண்டகாலமாக கோரி வந்தாலும், உச்சநீதிமன்ற உத்தரவு என்பதால், மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தேர்வை நடத்தி வருகிறது.

இதே போல் மருத்துவ மேற்படிப்புகளுக்கு நீட்-பிஜி எனும் தேர்வையும் நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தான், நாடு முழுவதும் உள்ள மத்திய மற்றும் மாநில அரசுக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்நிலையில் முதுகலை மருத்துவப் படிப்பில் நாடு முழுவதும் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு இனி-செட் எனும் தேர்வு நடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இனி-செட் தேர்வு :
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளாக அறிவிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவ படிப்புகளைப் படிக்க இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு முறையின் மூலம் வரும் 2021 கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த 11 மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளாகும். இதில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் அடங்கும்.

இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த செப்டம்பரில் வெளியாகி, தற்போது தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளும் வெளியாகி விட்டன. நாளை மறுநாள் தேர்வு நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த விஷயம் தற்போது திடீர் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. 

தற்போதைய பரபரப்பின் பின்னணி என்ன?

தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இனி-செட் தேர்வுக்கு வெளி மாநிலங்களில் தமிழக மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சூழ்நிலைகளில், அண்டை மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு குறிப்பிட்ட சமயத்தில் தேர்வுகளில் கலந்து கொள்வது சிக்கலானது என்பதால் தமிழகத்தில் அதிக இடங்களை ஒதுக்கி, இங்கேயே தேர்வை நடத்த, இதில் நேரடியாக தலையிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த கடிதம் குறித்த தகவல் வெளியான சூழ்நிலையில், தற்போது தான் இந்த தேர்வு குறித்த அறிவிப்பு வந்ததைப் போல் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பரில் வெளியாகி நாளை மறுநாள் தேர்வு நடக்க உள்ளது என்பது தான் உண்மை.

அதே நேரத்தில் இந்த 11 மருத்துவ கல்லூரிகளைத் தவிர்த்து இதர எய்ம்ஸ் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் நீட்-பிஜி அடிப்படவியிலேயே மருத்துவ சேர்க்கை நடக்கும்.

மேலும் மருத்துவ பட்டப்படிப்புக்கு வழக்கம் போல் இந்த 11 மருத்துவ கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

Views: - 39

0

0