சீனர் உட்பட இரண்டு பேரைக் கைது செய்த தெலுங்கானா காவல்துறை..! ஆன்லைன் கடன் மோசடி வழக்கில் அடுத்த அதிரடி..!

14 January 2021, 6:43 pm
Chinese_Arrested_Online_Loan_Scam_UpdateNews360
Quick Share

தெலுங்கானாவின் ராச்சகொண்டா காவல்துறையின் சைபர் கிரைம் செல் உடனடி ஆன்லைன் கடன் செயலி மூலம் மோசடியில் ஈடுபட்ட மகாராஷ்டிராவின் தானேவைச் சேர்ந்த ஒரு இந்திய குடிமகன் மற்றும் ஒரு சீன நாட்டவர் ஆகிய இருவரை கைது செய்தது.

உடனடி கடன் செயலிகளின் மோசடி வழக்கு தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாகவும், முன்னர் கைது செய்யப்பட்ட நபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், சைபர் கிரைம் செல் அதிகாரிகள் மகாராஷ்டிராவின் தானேயில் இருவரையும் கண்டுபிடித்தனர்.

மும்பையில் வசிக்கும் சீன நாட்டைச் சேர்ந்த மார்க் எனும் ஹீ ஜியான் (26) மற்றும் தானே மேற்குப் பகுதியில் வசிக்கும் ஆடிட்டர் விவேக் குமார் (26) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரும் உடனடி கடன் செயலி மூலம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

காவல்துறையினர் அவர்களை தானே உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் ஹைதராபாத்திற்கு அழைத்து வந்தனர்.

நான்கு மடிக்கணினிகள், இரண்டு மொபைல் போன்கள், ஒரு ஆப்பிள் கணினி, வைஃபை ரூட்டர், டெபிட் கார்டு ஆகியவற்றை சீனரிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத் கூறுகையில், “மார்க் ஒரு வணிக விசாவில் 2019 ஜூலை மாதம் இந்தியாவுக்கு வந்து, தானேவை தளமாகக் கொண்ட மைக்ரோ நிதி கடன் செயலி நிறுவனங்களின் இயக்குநர்களான சீன நாட்டினரான ஜு நான், சூ ஜின்சாங் மற்றும் ஜாவோ கியாவோவின் பிரதிநிதியாக சேர்ந்தார்.” எனக் கூறினார்.

இந்த நிறுவனங்கள் தங்கள் ஆன்லைன் கடன் செயலிகளான கிராக்ஸி பீன், கிரேஸி ரூபி போன்றவற்றின் மூலம் ஆன்லைனில் கடன் வாங்குபவர்களுக்கு அதிக வட்டி விகிதங்களுடன் உடனடி ஆன்லைன் மைக்ரோலோன்களை வழங்கி வந்துள்ளன.

இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து கிட்டத்தட்ட 28 கோடி ரூபாயை போலீசார் முடக்கியுள்ளனர். இன்னும் சில வங்கிக் கணக்குகள் இன்னும் போலீசாரால் சரிபார்க்கப்படவில்லை.

“இந்த ஆன்லைன் பணக் கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆன்லைன் செயலிகளின் அடிப்படையில் என்.பி.எஃப்.சி வணிகத்தை நடத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட சரியான உரிமங்கள் எதுவும் இல்லை” என்று கமிஷனர் மேலும் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசியின் பிரிவு 471, 419, 420, 504, 506, 384 மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 டி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீப காலமாக ஆன்லைன் கடன் மோசடி தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில், சீனர்கள் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 5

0

0