ஹரியானாவில் உள்ளூர் மக்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பில் 75% ஒதுக்கீடு..! தமிழகத்தில் சாத்தியமா..? ஓர் விரிவான அலசல்..!

4 March 2021, 2:40 pm
Employment_UpdateNews360
Quick Share

ஹரியானா சட்டமன்றத்தின் பட்ஜெட் அமர்வு தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா இறுதியாக 2020’ஆம் ஆண்டு ஹரியானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். 

இது ஹரியானா மாநில மக்களுக்கு தனியார் துறை வேலைகளில் 75 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குகிறது. ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சியான ஜனநாயக் ஜந்தா கட்சி (ஜே.ஜே.பி) அளித்த ஒரு முக்கிய சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியான இந்தச் சட்டம் இயற்றப்படுவது, ஹரியானாவில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு இரண்டையும் ஒருங்கே பெற்றுள்ளது.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள் :

ஹரியானாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும், மாதந்தோறும் ரூ 50,000’க்கும் குறைவாக சம்பளம் பெரும் ஊழியர்களில் 75% பேர் ஹரியாணாவைச் சேந்தவர்களாக இருக்க வேண்டும். இது தொடர்பாக ஒரு போர்ட்டல் உருவாக்கப்படும். அதில் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், நிறுவனங்கள் ஊழியர்கள் குறித்த தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.

75% இட ஒதுக்கீடு வழங்காத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.

சட்டத்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் :

இந்த சட்டம் குறைந்த ஊதியம் பெரும் ஹரியானா மக்களுக்கும் மிகப்பெரிய நன்மை பயக்கும் திட்டமாகும். குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர்கள் அண்டை மாநிலங்களுக்கு புலம் பெயரை வேண்டிய அவசியம் குறைந்துவிடும். பெரும்பாலான மக்களுக்கு உள்ளூரிலேயே வேலை கிடைப்பதால் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும்.

ஆனால் ஹரியானா போன்ற மிகச்சிறிய மாநிலத்தில் உள்ள தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கை மிக அதிகம். குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்களை அதிகம் கொண்ட குருகிராமில் பிபிஓ நிறுவனங்களும் மிக அதிகம். பிபிஓ போன்ற நிறுவனங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பணியாற்றும் நிலையில், அவர்களில் பெரும்பாலோனோர் குறைந்த ஊதியம் பெரும் நபர்களாக இருப்பர்.

ஹர்யனாவின் புதிய சட்டத்தால், இந்த நிறுவனங்களுக்கு திறமையான ஊழியர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இது பிபீஓக்களுக்கு மட்டுமல்லாது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். கொரோனா போன்ற ஒரு பெரும் சிக்கலில் இருந்து மீண்டு வரும் இந்த நேரத்தில் அனுபவம் இல்லாத தொழிலாளர்களை பணியமர்த்தி பயிற்சி கொடுப்பதும் நிறுவனங்களுக்கு சிக்கலான ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. 

இதனால் பிக்கி, சிஐஐ உள்ளிட்ட தொழில் அமைப்புகள் இந்த சட்டத்தை திரும்பப் பெறுமாறு ஹரியானா அரசை வலியுறுத்தியுள்ளது.

ஹரியானா அரசு விலக்குகள் அளிக்கவோ அல்லது சட்டத்தைத் திரும்பப் பெறவோ மறுக்கும்பட்சத்தில், தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி நகரக் கூடும். இது நீண்ட கால அடிப்படையில் ஹாயானாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

எனினும் கூட்டணி ஆட்சி நடக்கும் ஹரியானாவில், கடந்த தேர்தலில் ஜனநாயக் ஜந்தா கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியான இந்த 75% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் விடாப்பிடியாக உள்ளதால், இதை நீக்குவது அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என ஆளும் தரப்பு நம்புகிறது.

கடந்த ஆண்டு ஜூலையில் இதற்கான அவசர சட்டத்தை ஹரியானா அரசு ஆளுநருக்கு அனுப்பிய நிலையில், ஹரியானா ஆளுநர் இது குறித்து முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்தார். குடியரசுத் தலைவர் சந்தேகம் கிளப்பி அமித் ஷா தலைமையிலான உள்துறைக்கு அனுப்பினார்.

அங்கு எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், அவசர சட்டத்தை வாபஸ் பெற்று, கடந்த அக்டோபரில் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, தற்போது சட்டமாகியுள்ளது. 

இதற்கிடையே அரசியலமைப்புக்கு விரோதமாக இந்த சட்டம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.   

மற்ற மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா ?

நாட்டின் பிற உற்பத்தி மற்றும் சேவைத் துறை மையங்களில், ஆந்திரா சமீபத்தில் ஹரியானாவைப் போன்ற ஒரு சட்டத்தை உருவாக்கியது. அதே நேரத்தில் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசாங்கத்தின் புதிய தொழில்துறை கொள்கை கர்நாடக மக்களுக்கு 70 சதவீத வேலை ஒதுக்கீட்டை உருவாக்கியுள்ளது. 

இதுபோன்ற சட்டத்தைக் கொண்டுவர உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தில் சாத்தியமா ?

தமிழ்நாட்டிலும், கீழ்நிலை பணியிடங்களில், வெளிமாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால், தமிழர்களுக்கே வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் எனும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

எனினும், ஹரியானவைப் போல் தமிழகத்திலும் பல தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு படித்தவர்கள் அதிகம் என்பதால் பொதுவாக குறைந்த ஊதிய பணிகளுக்கு தமிழக மக்கள் ஆர்வம் காட்டுவது குறைந்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் தான் தொழிலாளர்களுக்காக வெளிமாநிலங்களை நோக்கிச் செல்வதாக தொழில் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே, தமிழகத்திலும் இதே போல் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால், தொழில் நிறுவனங்கள் தொழிலாளர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் இது தமிழக பொருளாதாரத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், தற்போதையை ஹரியானா அரசின் சட்டத்தால், எதிர்க்கட்சிகள் மூலம் இந்த கோரிக்கைகள் இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 1

0

0