டெல்லி குண்டுவெடிப்பு தீவிரவாதச் செயல் தான்..? இஸ்ரேல் தூதரகம் பரபரப்பு அறிக்கை..!
29 January 2021, 8:24 pmஇஸ்ரேலிய தூதரகம் அருகே இன்று மாலை குறைந்த அளவிலான தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் யாரும் காயமடையவில்லை, இருப்பினும், வெடிப்பில் ஓரிரு கார்கள் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீஸ் சிறப்பு செல் குழு, போலீசார் மற்றும் விசாரணை நிறுவனங்கள் விசாரித்து வருகின்றன. இதற்கிடையில், குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இஸ்ரேலிய தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டதோடு, இது ஒரு பயங்கரவாத சம்பவமாக கருதுவதாகத் தெரிவித்துள்ளது.
“டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே இன்று நடந்த ஒரு சிறிய குண்டு வெடிப்பை, இஸ்ரேல் ஒரு பயங்கரவாத சம்பவமாக கருதுகிறது” என்று இஸ்ரேல் தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டெல்லியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பைக் கருத்தில் கொண்டு அனைத்து விமான நிலையங்கள், முக்கிய அமைப்புகள் மற்றும் அரசு கட்டிடங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வெடிப்பு குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இஸ்ரேல் வெளியுறவு மந்திரி காபி அஷ்கெனாசியிடமும் பேசியுள்ளார்.
ஒரு ட்வீட்டில், ஜெய்சங்கர், “இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே ஏற்பட்ட வெடிப்பு குறித்து இப்போது இஸ்ரேலிய எஃப்.எம் காபி அஷ்கெனாசியிடம் பேசியுள்ளேன். இதை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். தூதரகம் மற்றும் இஸ்ரேலிய தூதர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பதாக அவருக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. விஷயம் விசாரணையில் உள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் டெல்லியின் மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
0
0