தெலுங்கானாவில் கால் பாதிக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி..! ஜூலை 8 ஆம் தேதி தனிக்கட்சி தொடக்கம்..!

10 April 2021, 8:22 pm
sharmila_reddy_updatenews360
Quick Share

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி தனது தந்தையின் பிறந்த நாளான ஜூலை 8’ஆம் தேதி தெலுங்கானாவில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

ஷர்மிளாவின் இந்த நடவடிக்கைக்கு அவரது தாயார் ஒய்.எஸ். விஜயலட்சுமி ஒப்புதல் அளித்தார். தெலுங்கானா மக்களுக்கு சேவை செய்யும் முடிவை தனது மகள் தேர்வு செய்ததில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். தனது மகளுக்கு தந்தையைப் போலவே தைரியமும் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

ஐதராபாத்தில் இருந்து ஒரு பெரிய கார் பேரணி மூலம் சென்று பின்னர் கம்மத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் நேற்று மாலை கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஷர்மிளா ரெட்டியின் சகோதரர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் தற்போது ஆட்சி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

எனினும் ஜெகன் மோகன் ரெட்டி தெலுங்கானாவில் தனது தங்கை ஷர்மிளா ரெட்டியின் அரசியல் திட்டங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக் கூறி விலகிவிட்டார்.

இந்நிலையில் ஷர்மிளா ரெட்டியின் கட்சியின் பெயர், லோகோ, கொடி மற்றும் சித்தாந்தம் ஜூலை 8’ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல்கள் 2023’இல் தெலுங்கானாவில் நடைபெற உள்ள நிலையில், அதை முன்வைத்து தனது தேர்தல் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை கம்மத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய ஷர்மிளா ரெட்டி, சிவாஜி படத்தின் பிரபலமான ரஜினிகாந்த் வசனமான “சிங்கம் சிங்குளாகத்தான் வரும்” என்று கூறி தொண்டர்களை ஆரவாரப்படுத்தினார்.

அவர் மேலும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), பாஜக அல்லது காங்கிரஸின் உத்தரவின் பேரில் தான் வரவில்லை என்றும் மக்கள் சார்பாக இந்த மூன்று கட்சிகளையும் குறிவைக்கும் அம்புக்குறியாக தனது கட்சி இருக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையே டி.ஆர்.எஸ் அரசாங்கம் 1.91 லட்சம் வேலை காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரி ஏப்ரல் 15’ம் தேதி, வேலையற்ற இளைஞர்கள் சார்பில் ஷர்மிளா ரெட்டி மூன்று நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தெலுங்கானாவில் பரபரப்பான அரசியல் பிரச்சினையாக இருந்து வருகிறது.

தான் தெலுங்கானாவைச் சேர்ந்தவர் அல்ல என்ற விமர்சனத்தை மறுத்த (ஒய்.எஸ்.ஆர். ஆந்திராவின் கடப்பாவைச் சேர்ந்தவர்) ஷர்மிளா ரெட்டி, தான் வளர்ந்து, படித்து, தனது குழந்தைகளைப் பெற்றெடுத்தது எல்லாம் தெலுங்கானாவில் தான் எனக் கூறினார். தெலுங்கானாவை மிகவும் நேசிப்பதாகவும் அதன் நலனுக்கு எதிராக ஒருபோதும் செயல்பட மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

“தெலுங்கானாவுக்கு வர வேண்டிய ஒரு சொட்டு நீர் கூட வேறு மாநிலத்திற்கு செல்ல நான் அனுமதிக்க மாட்டேன்” என்று அவர் கூறினார்.

முந்தைய ஆந்திராவின் தெலுங்கானா மற்றும் ஆந்திர பகுதிகளுக்கு இடையே நீர் ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஷர்மிளா ரெட்டிக்கு யார் அரசியல் ரீதியாக உதவலாம் என்பது குறித்து பல ஊகங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியின் போது தெலுங்கானாவில் அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்திய ரெட்டிக்கள், அவரைச் சுற்றி திரண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர் தந்தையைப் பாராட்டியவர்களைத் தவிர, எஸ்சி / எஸ்டி வாக்குகளையும் ஷர்மிளா ஈர்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி.ஆர்.எஸ் தான் தெலுங்கானாவில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியாகும். காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது. எதிர்க்கட்சி இடம் வெற்றிடமாக உள்ள நிலையில் பாஜகஅதைக் கைப்பற்ற தீவிரமாக செயலாற்றி வரும் நிலையில், ஷர்மிளா ரெட்டியின் வருகை தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 60

0

0