“அம்பானி வீட்டின் அருகே வெடிபொருள் நிரம்பிய காரை வைத்தது நாங்கள் தான்”..! ஜெய்ஷ்-உல்-ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்பு..!

28 February 2021, 12:00 pm
Mumbai_Ambani_House_Jaish_Ul_hind_Updatenews360
Quick Share

ஜெலட்டின் வெடிபொருள் நிறைந்த வாகனத்தை மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு வெளியே கைப்பற்றிய நிலையில், வெடிபொருள் வைத்ததற்கான பொறுப்பை ஜெய்ஷ் உல் ஹிந்த் எனும் பயங்கரவாத அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

டெலிகிராம் செயலியில் இதை தங்கள் அமைப்பு தான் செய்தது என்று ஜெய்ஷ்-உல்-ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும், மும்பை காவல்துறை இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

ஜெய்ஷ்-உல்-ஹிந்த் அமைப்பு, உண்மையான தாக்குதலை மேற்கொள்ளாமல் இருக்க முகேஷ் அம்பானியிடம் பிட்காயின் மூலம் பணம் கோரியுள்ளது.

முன்னதாக டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே நடந்த ஒரு சிறிய குண்டுவெடிப்பிலும் இந்த அமைப்பின் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் உடன் இதற்கான விசாரணையில் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெலட்டின் வெடிபொருள் வைக்கப்பட்ட எஸ்யூவி கார் முதன்முதலில் பிற்பகல் 3 மணியளவில் கவனிக்கப்பட்டது. அதன்பிறகு உள்ளூர்வாசிகள் சிலர் உள்ளூர் போலீஸை எச்சரித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முழு பகுதியையும் சுற்றி வளைத்தனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, வெடிபொருளின் மொத்த எடை 2.60 கிலோ ஆகும்.

இந்நிலையில் அம்பானி வீட்டின் அருகே எஸ்யூவியை வைத்த நபர் பாதுகாப்பாக திரும்பிவிட்டார் என்று பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

அம்பானியின் வீடு அமைந்துள்ள பகுதியில், இந்திய கார்ப்பரேட் உலகின் முக்கிய நபர்கள், உயர் அரசியல்வாதிகள், பல்வேறு முக்கிய நபர்கள், அரசு அதிகாரிகள், தூதர்கள், பாலிவுட்டைச் சேர்ந்தவர்கள் வசித்து வருவதால் தற்போது அங்கு கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 18

0

0