ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தின் புதுப்பிக்கட்ட வளாகம் : பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
Author: Babu Lakshmanan27 August 2021, 9:27 am
புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தின் வளாகத்தை பிரதமர் மோடி நாளை காணொளி காட்சியின் மூலம் திறந்து வைக்க உள்ளார்.
கடந்த 1919ம் ஆண்டு ஏப்.,13ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் உள்ள ஜாலியன்வாலா பாக் எனும் இடத்தில் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி தலைமையிலான ராணுவத்தினர், பெண்கள், சிறுவர்கள் உள்பட ஏராளமான இந்திய மக்களை சுட்டுக் கொன்றனர். சுதந்திரத்திற்காக உயிரை தியாகம் செய்தவர்களின் நினைவை போற்றும் விதமாக, அங்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. அந்த பஞ்சாபின் கட்டடக் கலை அமைப்பின் அடிப்படையில் நினைவிடத்தில் புதுப்பிக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. குறிப்பாக, சாஹிதி கிணறு சீரமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு நடைபாதைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமில்லாமல், பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு நான்கு அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் 1919 ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற நிகழ்வுகளை காண்பிக்கும் ஒலி-ஒளி காட்சியும் இடம்பெறும். புதுப்பிக்கப்பட்ட இந்த நினைவிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். காணொலி வழியில் நடைபெறும் இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
0
0