ஏழுமலையான் கோவிலில் தொடங்கியது ஜேஷ்டாபிஷேகம் : இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது!!

22 June 2021, 4:30 pm
Tirupati Temple - Updatenews360
Quick Share

திருப்பதி : ஏழுமலையான் கோவிலில் வருடா வருடம் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் நடத்தப்படும் ஜேஷ்டாபிஷேகம் இன்று துவங்கி நடைபெறுகிறது. சாமி ஊர்வலம், உற்சவங்கள், கட்டண சேவைகள் ஆகிய பயன்பாடுகளுக்காக கோவில்களில் உற்சவ மூர்த்திகளை பழங்காலம் முதல் ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.

தினமும் பயன்பாட்டில் இருக்கும் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், ஆராதனை ஆகியவை தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இதனால் உற்சவ மூர்த்திகளின் மீது பொருத்தப்பட்டிருக்கும் கவசங்கள் சேதம் அடைவது வழக்கம்.

எனவே அவற்றை ஒவ்வொரு ஆண்டும் மாற்றி புதுப்பிப்பது நடைமுறையாகும். உற்சவ மூர்த்திகளுக்கு கவசங்களை மாற்றும் நிகழ்ச்சி ஜேஷ்டாபிஷேகம் என்ற பெயரில் கோவில்களில் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டிற்கான ஏழுமலையான் கோவில் ஜேஷ்டாபிஷேகம் இன்று துவங்கி நடைபெறுகிறது. ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு இன்று பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு கடந்த ஆண்டு பொருத்தப்பட்ட தங்க கவசம் அகற்றப்பட்டு முத்து கவசம் பொருத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஜேஷ்டாபிஷேகத்தின் இரண்டாவது நாளான நாளை உற்சவ மூர்த்திகளுக்கு வைர கவசம் பொருத்தப்படும்.

நிறைவு நாளான நாளை மறுநாள் உற்சவ மூர்த்திகளுக்கு புதிய தங்க கவசம் பொருத்தி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஏழுமலையான் கோவிலில் இன்று ஜேஷ்ட்டாபிஷேகம் நடத்தப்பட்டது.

Views: - 223

0

0