தனியார் துறை வேலைவாய்ப்பில் 75% உள்ளூர் இட ஒதுக்கீடு..! ஹரியானாவைத் தொடர்ந்து ஜார்க்கண்டும் அதிரடி அறிவிப்பு..!

Author: Sekar
13 March 2021, 3:54 pm
Hemant_Soren_UpdateNews360
Quick Share

ஹரியானா பாஜக அரசாங்கம் உள்ளூர் மக்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்திய நிலையில், ஜார்க்கண்ட் மாநில அமைச்சரவை, தனியார் துறையில் 75 சதவீத வேலைகளை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க வகை செய்யும் புதிய வேலைவாய்ப்பு கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ரூ 30,000’த்திற்கும் குறைவான ஊதியம் பெரும் வேலைகளில் 75% உள்ளூர் வேலைவாய்ப்பு கட்டாயமாக்கப்படும்.

மார்ச் 17’ஆம் தேதி தொடங்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது முதல்வர் ஹேமந்த் சோரன் புதிய கொள்கையை அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. “அடுத்த வாரம் தொடங்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில், மார்ச் 17 அன்று முதல்வர் புதிய கொள்கையை அறிவிப்பார். சில விதிமுறைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அவை சட்டசபையில் அறிவிக்கப்படும்.” என ஜார்க்கண்ட் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜார்கண்ட் தொழில்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கை, 2021 வரைவு குறித்து பல்வேறு அமைப்புகளுடன் விவாதிக்க ஹேமந்த் சோரன் டெல்லிக்குச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு புதிய கொள்கை குறித்த முடிவு வந்துள்ளது. இந்நிகழ்ச்சியை ஒட்டி மாநில அரசு பிக்கி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீடு கொள்கையை மாநில அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் ஹேமந்த் சோரன் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 12’ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது வேறு பல திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரிகள் இன்னும் விவரங்களை வழங்கவில்லை.

2020 மே மாதத்தில் கொரோனா தொற்றுநோயின் உச்சத்தில் 59.2 சதவீதமாக உயர்ந்து 2021 ஜனவரியில் மாநிலத்தின் வேலையின்மை விகிதம் படிப்படியாக 11.3 சதவீதமாகக் குறைந்தது என்று பொருளாதார ஆய்வு தெரிவித்துள்ளது. ஜனவரி 2020’இல், வேலையின்மை விகிதம் 10.6% ஆக இருந்தது.

ஜார்க்கண்ட் உள்ளூர் இடஒதுக்கீடு கொள்கை : கடந்து வந்த பாதை

உள்ளூர் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்தும்போது எதிர்கொள்ளக்கூடிய ஒரு பெரிய சிக்கல் பயனாளிகளை அடையாளம் காண்பது தான். ஜார்கண்டி என்பவர் யார் என்ற வரையறையைச் சுற்றியுள்ள கேள்விகள் முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டியை 2002’ல் தனது பதவியையே ராஜினாமா செய்ய வழிவகுத்தன. அதன்பிறகு அரசாங்கங்கள் இந்த பிரச்சினையிலிருந்து விலகிவிட்டன.

2016’ஆம் ஆண்டில், முதலமைச்சர் ரகுபர் தாஸின் ஆட்சியின் கீழ், ஒரு தளர்வான குடியேற்றக் கொள்கையை அறிவித்திருந்தது. இது ஒரு மாநிலத்தின் குடியேற்றமாக கருதப்படக்கூடிய ஆறு வழிகளை பட்டியலிட்டது. எவ்வாறாயினும், பழங்குடியினருக்கு முன்னுரிமை கொடுக்காததால் இந்தக் கொள்கை விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் யாரை ஜார்கண்டி என்று கருதுவது என்பது குறித்து முடிவு செய்ய துணைக்குழு அமைக்கப்படும். அதன் அடிப்படையில் உள்ளூர் வேலைவாய்ப்பு கொள்கை இயற்றப்படும் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

Views: - 76

0

0