ஜம்மு காஷ்மீரில் நிலம் வழங்கும் திட்டத்தில் முறைகேடு..! 6 மாதத்திற்குள் அனைத்து நிலங்களையும் மீட்டெடுக்க உத்தரவு..!

1 November 2020, 10:17 am
Kashmir_UpdateNews360
Quick Share

ரோஷ்னி நிலத் திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாகவும், ஆறு மாதங்களில் முழு நிலத்தையும் மீட்டெடுப்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் ஆரம்பத்தில் சுமார் 1,250 ஹெக்டேர் நிலங்களை குடியிருப்பாளர்களுக்கு வழங்க திட்டமிட்டது. இதில் 15.85 சதவீத நிலம் குடியிருப்பு பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அத்தகைய குடியிருப்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் வருவாய்க்கு எதிராக, உண்மையில் ஈட்டப்பட்ட வருவாய் மிகக் குறைவு. இதன்மூலம் திட்டத்தின் முறைகேடு அம்பலமாகியது. இதையடுத்து கடந்த வருடம் நவம்பர் 28 அன்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னரான சத்ய பால் மாலிக் இந்த திட்டத்தை நிறுத்தி வைத்தார்.

அக்டோபர் 9’ம் தேதி, தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ராஜேஷ் பிண்டால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த திட்டத்தில் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், ஒவ்வொரு எட்டு வாரங்களுக்கும் ஒரு நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.

ரோஷ்னி திட்டம் அல்லது ரோஷினி சட்டம் என்று பிரபலமாகக் குறிப்பிடப்படும் இந்தச் சட்டம், ஒரு புரட்சிகர நடவடிக்கை என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இது மின் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான வளங்களை உருவாக்குவது மற்றும் அரசு நிலத்தில் வசிப்பவர்களுக்கு வசிப்பிட உரிமைகளை வழங்குவது என்ற இரட்டை நோக்கங்களைக் கொண்டிருந்தது.

இந்த சட்டம் விவசாயத் துறையை உயர்த்தவும், இதையொட்டி மாநிலம் முழுவதும் மின் திட்டங்களுக்கு நிதியளிப்பதில் கணிசமான வருவாயை ஈட்டவும் உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்தில் முறைகேடு உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ள ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம், இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலங்களை 6 மாதத்திற்குள் மீட்கவும் முடிவு செய்துள்ளது.

Views: - 69

0

0

1 thought on “ஜம்மு காஷ்மீரில் நிலம் வழங்கும் திட்டத்தில் முறைகேடு..! 6 மாதத்திற்குள் அனைத்து நிலங்களையும் மீட்டெடுக்க உத்தரவு..!

Comments are closed.