ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 இந்து அகதிகள் உயிரிழப்பு..! ராஜஸ்தானை உலுக்கிய மர்ம மரணங்கள்..!

9 August 2020, 2:22 pm
Rajasthan_Hindu_Refugees_Died_Updatenews360
Quick Share

ராஜஸ்தானின் ஜோத்பூரில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் 11 இந்து அகதிகள் தங்கள் வீட்டில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

ஆனால் சம்பவம் நடந்த இடத்தில் பூச்சிக்கொல்லிகளின் மணம் வீசுவதாகக் கூறப்படுவதால், விஷ வாயு வெளியேற்றத்தின் காரணமாக அவர்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

ஜோத்பூர் மாவட்ட தலைமையகத்திலிருந்து 150 கி.மீ தூரத்தில் உள்ள தியோடு காவல் நிலைய எல்லை பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து டெச்சு காவல் நிலைய அதிகாரி அனுமன் ராம் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

இது தற்கொலையாக இருக்கலாம் என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பொருளாதார கஷ்டங்கள் அகதிகளின் தற்கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த குடும்பம் 2012’ல் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து வந்து இந்தியாவில் குடியுரிமை பெறும் பணியில் இருந்தது. அன்றிலிருந்து அவர்கள் ஒரு அகதி முகாமில் தங்கியிருந்தனர்.

நேற்றிரவு சம்பவம் நடந்த சமயத்தில் ஒரு குடும்ப உறுப்பினர் மட்டும்  வீட்டில் இல்லாததால் இந்த துயரத்தில் இருந்து தப்பினார்.

இந்த வழக்கின் விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் குடும்பம் எவ்வாறு இறந்தது என்பது குறித்து இதுவரை போலீசாரால் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.