கங்கனா ரனவத்தின் அலுவலகத்தை இடிக்கும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள்..! பின்னணியில் சிவசேனா..?

7 September 2020, 7:03 pm
kangana_updatenews360
Quick Share

மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தனது அலுவலக இடத்தை இடிக்க உள்ளதாக நடிகை கங்கனா ரனவத் குற்றம் சாட்டியுள்ளார். கங்கனா தனது சொத்தை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் என்று கூறிக்கொண்ட நபர் இடிக்க உள்ளது குறித்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மும்பைக்கு அவர் திரும்புவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இது நடந்துள்ளது. சமீபத்தில் மும்பை போலீசுக்கு எதிரான அவரின் கருத்துக்களால் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி உள்ளது.

தனது புதிய அலுவலக இடத்தைக் காட்டும் வீடியோவுடன், கங்கனா இந்தியில் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “இது மும்பையில் உள்ள மணிகர்னிகா பிலிம்ஸ் அலுவலகம். இதை அடைய தன்னுடைய 15 வருட கடின உழைப்பு தேவைப்பட்டது. எனக்கு எப்போதாவது ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக வாய்ப்பு கிடைத்தால் எனது சொந்த அலுவலகம் வேண்டும் என்பது எனது கனவுகளில் ஒன்றாகும். ஆனால் இப்போது என் கனவு அழிக்கப்படப் போகிறது என்று தெரிகிறது. இன்று சில மும்பை மாநகராட்சி அதிகாரிகள் முறையான நோட்டீஸ் எதுவும் இல்லாமல் கூறியுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில் அவரது அலுவலகத்திற்குள் சில ஆண்களைக் காட்டுகிறது. இந்த வீடியோவுடன் அவர், “அவர்கள் எனது அலுவலகத்தை வலுக்கட்டாயமாக அளவிட்டு எடுத்துக் கொண்டனர். மேலும் அவர்களின் அடாவடியைத் தட்டிக்கேட்ட எனது அண்டை வீட்டாரையும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள். எனது கட்டிடத்தை நாளை அவர்கள் இடிக்க உள்ளார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” என மேலும் கூறினார்.

அவர் மேலும், “என்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன. எனது சொத்தில் சட்டவிரோதமாக எதுவும் செய்யப்படவில்லை. மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சட்டவிரோதமாக எனது கட்டுமானத்தை இடிக்க முடிவு செய்துள்ளனர். இன்று அவர்கள் எனது இடத்தை சோதனை செய்தனர். நாளை எந்த அறிவிப்பும் இல்லாமல் அவர்கள் முழு கட்டமைப்பையும் இடிக்க வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.” எனக் கூறினார்.

இதற்கிடையே கங்கனாவுக்கு மும்பைக்கு திரும்புவதற்கு முன்னதாக மத்திய அரசின் ஒய்-பிளஸ் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர் தற்போது மணாலியில் இருக்கிறார். இதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி கங்கனா ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியில் வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில், “இது ஒரு தேசபக்தரின் குரலை பாசிஸ்டுகளால் நசுக்க முடியாது என்பதை நிரூபிக்கிறது. அமித் ஷாவுக்கு நான் நன்றியுள்ளவராக இருக்கிறேன். அவர் விரும்பினால், சில நாட்களுக்குப் பிறகு மும்பைக்குச் செல்லுமாறு அவர் எனக்கு அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் இந்தியாவின் ஒரு மகளை மதித்தார். அவரது பெருமையையும் சுய மரியாதையையும் பாதுகாத்தார். ஜெய் ஹிந்த்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கங்கனா ரனவத்தின் மும்பை குறித்த கருத்திற்கு, மஹாராஷ்டிராவை ஆளும் சிவ சேனா கட்சியும், அதன் எம்பியுமான சஞ்சய் ராவத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து பேசி வரும் நிலையில், அவருடைய அலுவலகத்தைக் குறிவைத்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவதால் இதன் பின்னணியில் சிவசேனா இருக்கலாம் என மும்பை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Views: - 0

0

0