கர்நாடகா பந்த்..! விவசாய அமைப்புகள் போர்க்கொடி..! மத்திய அரசை எதிர்த்து அல்ல..! காரணம் இது தான்..!

28 September 2020, 10:20 am
Protest_bangalore_Updatenews360
Quick Share

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சீர்திருத்தங்களை முன்னிட்டு வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் இன்று பல்வேறு விவசாயிகள் அமைப்புகளால் மாநில அளவிலான பந்த் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் இதற்குக் காரணம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சீர்திருத்தங்கள் அல்ல.

இது எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசாங்கத்தால் செய்யப்பட்ட நில சீர்திருத்த மசோதாக்களை எதிர்த்து நடத்தப்படுகிறது. 

எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸின் கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், கர்நாடக வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) (திருத்தம்) மசோதா மற்றும் கர்நாடக நில சீர்திருத்த (இரண்டாம் திருத்தம்) மசோதாவை நிறைவேற்றுவதில் எடியூரப்பா நிர்வாகம் வெற்றி பெற்றது.

நில சீர்திருத்தச் சட்டத்தின் திருத்தங்கள் விவசாய நில உரிமையை தாராளமயமாக்கும் அதே வேளையில், ஏபிஎம்சி திருத்த மசோதா உள்ளூர் வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்களின் (ஏபிஎம்சி) அதிகாரங்களைக் குறைக்கிறது மற்றும் தனியார் நபர்கள் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) வைத்திருந்தால் விவசாய வர்த்தகத்தைத் தொடங்க அனுமதிக்கிறது.  

சட்டமன்றத்தில் திருத்தச் சட்ட மசோதாக்களை எதிர்த்த எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினரும், நேற்று முடிவடைந்த சட்டசபை கூட்டத்தின்போது சில தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவந்ததற்காக எதிர்த்து போராடும் பல தொழிலாளர் அமைப்புகளும் இதற்கு ஆதரவளிக்கின்றன.

பந்த் எந்தவொரு முறையிலும் வலுக்கட்டாயமாக அமல்படுத்தப்படுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள மாநில அரசு, அதன் அலுவலகங்கள், மருத்துவமனைகள், கடைகள் மற்றும் நிறுவனங்களின் இயல்பான செயல்பாட்டிற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் டாக்ஸிகள் மற்றும் பேருந்துகளின் இயக்கத்தைப் பராமரிப்பதாகவும் கூறியுள்ளது .

எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இன்றைய பந்த்தின் போது மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தவும் விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளது.

பெங்களூரில், உழவர் எதிர்ப்பு சட்டங்களுக்கு எதிராக டவுன்ஹால் முதல் மைசூர் வங்கி வட்டம் வரை போராட்ட ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

சில சரக்குப் போக்குவரத்து, டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள் பந்த்திற்கு தங்கள் ஆதரவை அறிவிப்பதால், அவர்களின் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், தனியார் பேருந்து சேவைகளும் பாதிக்கப்படலாம்.

இருப்பினும், அரசுக்கு சொந்தமான பொது போக்குவரத்து பஸ் மற்றும் மெட்ரோ சேவைகள் இயங்க வாய்ப்புள்ளது.

இருப்பினும், கன்னட சார்பு அமைப்புகள் உட்பட சில எதிர்ப்பு அமைப்புகள் பஸ் சேவையை நிறுத்த முயற்சிப்பதாகவும் ரயில் மறியலுக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியுள்ளன.

இதற்கிடையே கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேற்று தனது அரசாங்கம் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, போராட்டத்திற்கு தேவை இல்லை என்று கூறி பந்தை ஒதுக்கித் தள்ள முயன்றார்.

மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை எந்தவித அச்சமும் இன்றி சாதாரணமாக முன்னெடுக்க முடியும் என்று உறுதியளித்த வருவாய்த்துறை அமைச்சர் அசோகா, பந்தை வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்த அல்லது கல் வீசுதல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் கடுமையான விளைவுகளை எதிர்நோக்கும் என எச்சரித்தார்.

Views: - 1

0

0