பாஜக வளர்ச்சியை தடுக்க தெலுங்கானா முதல்வர் பதவியை துறக்க சந்திரசேகர் ராவ் முடிவு..? மகனை முதல்வராக்க கட்சியினருடன் ஆலோசனை..!

22 January 2021, 9:53 pm
KCR_KTR_UpdateNews360
Quick Share

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் மூலம் தெலுங்கானாவில், பாஜக வலுவாக காலூன்றி வருவதால், தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியை வலுப்படுத்த, மாநில முதல்வர் பதவியிலிருந்து சந்திரசேகர் ராவ் விலக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

முதல்வர் பதவியிலிருந்து தான் விலகிக் கொண்டு, அந்த பொறுப்பை தற்போது மாநில அமைச்சராக உள்ள தனது மகன் கே.டி.ராமாராவை முதல்வராக்க திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சந்திரசேகர் ராவ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து பிரித்து, தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் கோரிக்கை நீண்ட காலமாக இருந்த நிலையில், சந்திரசேகர் ராவ் இதற்கான போராட்டத்தில் இணைந்த பிறகு தான், தனி தெலுங்கானா கனவு 2014’இல் நினைவேறியது. இதையடுத்து 2014’இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சந்திரசேகர் ராவ் முதல்வரானார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், தனக்கு அடுத்து அரசியல் வாரிசாக தயார்படுத்த, மகன் கே.டி.ராமாராவிற்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்கினார். அதன்பின், கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் ராமாராவே கவனித்து வருகிறார்.

மேலும் சந்திரசேகர ராவின் மகள் கவிதா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிலையில், 2019’இல் நடைபெற்ற தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். அதன் பின்னர்தான் கவிதாவிற்கு தற்போது மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு, ராஜ்யசபா எம்பியாக உள்ளார். 

இதே போல், சந்திரசேகர ராவின் அக்கா மகன் ஹரீஷ் ராவும் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். மேலும், அமைச்சரவையில் தற்போது அமைச்சராகவும் உள்ளார். 

சமீபத்தில் நடந்து முடிந்த ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில், பாஜக 44 வார்டுகளில் வெற்றி பெற்று 2’வது பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால் மாநிலத்தில் கட்சியை பலப்படுத்த முடிவெடுத்துள்ள சந்திரசேகர ராவ், தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ள தனது மகன் ராமாராவை, முதல்வர் நாற்காலியில் அமரவைக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்கு கட்சியினர் மத்தியிலும் அமோக ஆதரவு இருப்பதால், விரைவில் தெலுங்கானா முதல்வர் நாற்காலியில், சந்திரசேகர் ராவின் மகன், கே.டி.ராமராவ் அமருவார் என டிஆர்எஸ் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0