கேரள விமான விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு…! பலர் நிலைமை கவலைக்கிடம்
8 August 2020, 9:30 amதிருவனந்தபுரம்: கேரளாவில் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
துபாயில் இருந்து கோழிக்கோடு காரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்றிரவு ஏர் இந்தியாவின் விமானம் வந்தது. அதில் 184 பயணிகள், சிப்பந்திகள் உள்பட மொத்தம் 190 பேர் இருந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஓடுதளத்தில் இறங்க தயாரானது. எதிர்பாராத விதமாக அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக விமானம் இரண்டு பாகங்களாக உடைந்தது.
விபத்து குறித்து அறிந்த கிராமத்தினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அரசு தரப்பில் மீட்பு படையும் வந்தது. இரண்டு குழுக்களும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சிக்கியிருந்த அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 15 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
இதன் மூலம் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விமானியுடன் துணை விமானியும் இறந்துவிட்டார். விபத்தில் உயிரிழந்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.