தங்கக் கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு நிராகரிப்பு..! கொச்சி நீதிமன்றம் அதிரடி..!

21 August 2020, 7:14 pm
Swapna_Suresh_UpdateNews360
Quick Share

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு இன்று கொச்சியில் உள்ள நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விவகாரம் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதைக் கவனித்த நீதிபதிகள், ஸ்வப்னா வெளியே வந்தால் வழக்கிற்கு இடையூறாக இருக்கும் என்பதால் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் அமலாக்க இயக்குநரகம் பதிவு செய்த பணமோசடி வழக்கில் ஜாமீன் கோரி, ஸ்வப்னா சுரேஷ் கொச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அமலாக்கத்துறை கொச்சி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், “விசாரணையின் போது, தங்க கடத்தலில் தனக்கு பங்கு இருப்பதாக ஸ்வப்னா அமலாக்கத் துறையிடம் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் நாட்டிலும் வெளிநாட்டிலும் சதி நடந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. தான் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டியது அவருடைய கடமை.” எனத் தெரிவித்தது.

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று முக்கிய நபர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் ஆகஸ்ட் 26’ஆம் தேதி வரை கொச்சி நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

முன்னதாக, சிறப்பு என்ஐஏ நீதிமன்றமும் கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் (பொருளாதார குற்றங்கள்) நீதிமன்றமும் ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தன.

இராஜதந்திர சேனல்கள் மூலம் மாநிலத்தில் தங்கம் கடத்தப்படுவது தொடர்பான இந்த விவகாரம், 14.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம், இராஜதந்திர லக்கேஜ்கள் மூலம் மறைக்கப்பட்ட சரக்குகளில் கடத்தப்பட்டதை, ஜூலை 5’ம் தேதி திருவனந்தபுரத்தில் சுங்கத்துறை கண்டுபிடித்ததை அடுத்து விஷ்வரூபம் எடுத்து, கேரள முதல்வர் அலுவலகம் வரை நீண்ட தொடர்புகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Views: - 29

0

0