சிறைக் கைதிகளின் குழந்தைகளுக்கு 20 லட்ச ரூபாய் உதவித் தொகை..! கேரள அரசு அதிரடி அறிவிப்பு..!

7 November 2020, 4:11 pm
Prison_UpdateNews360
Quick Share

கேரளாவில் சிறைக் கைதிகளின் குழந்தைகளின் கல்விக்கான நிதி உதவியாக கேரள அரசு ரூ 20 லட்சத்தை அறிவித்துள்ளது. அடிப்படைக் கல்வியின் உதவிக்காக மொத்தம் ரூ 15 லட்சமும், தொழில்முறை படிப்புக்கான உதவியாக ரூ 5 லட்சமும் சிறைக் கைதிகளின் ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் என்று மாநில சமூக நீதி அமைச்சர் கே.கே.சைலஜா இன்று அறிவித்துள்ளார். 

மாநில சமூக நீதித்துறை மூலம் செயல்படுத்தப்படும் தகுதிகாண் சேவைகளின் ஒரு பகுதியாக கல்வி உதவி வழங்கப்படுகிறது. இந்த குழந்தைகள் அனைவரையும் சமூகத்தின் பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக  மேலும் கூறினார்.

“குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்பவர்கள் சிறையில் இருக்கும்போது, ​​அப்பாவி குழந்தைகளின் கல்வி திடீரென நிறுத்தப்படுகிறது. அவர்களின் படிப்புக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இந்த திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

அடிப்படைக் கல்விக்கான உதவித் திட்டத்தின் கீழ், பெண் கைதிகளின் குழந்தைகள் மற்றும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், ஆண் சிறையில் அடைக்கப்படுவதால் பெண்களின் தலைமையில் செயல்படும் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் பயன்பெற முடியும்.

கல்வி நிறுவனங்களுக்கான கட்டணங்கள் போக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், 1 முதல் 5’ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ 300, 6 முதல் 10’ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ 500, 11 மற்றும் 12’ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ 750 மற்றும் பட்டம் மற்றும் பிற தொழில்முறை படிப்புகளைத் தொடரும் மாணவர்களுக்கு தலா 1000 ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும் என சமூக நீதித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆயுள் அல்லது மரண தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் குழந்தைகளுக்கு தொழில்முறை படிப்புகளைத் தொடர உதவித் திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படும்.

கல்லூரி படிப்புகளில் பல்வேறு படிப்புகளுக்கு கட்டண அமைப்பு வேறுபட்டிருப்பதால், ஒவ்வொரு மாணவருக்கும் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் அனுமதிக்கப்படுகிறது.

எனினும் இந்த உதவித் தொகை வழங்கும் திட்டமானது வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே என கேரள அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும், பெற்றோர்கள் இருவரும் சிறையில் இருந்தால், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய உறவினர்கள் மேல் வறுமைக் கோட்டு (ஏபிஎல்) பிரிவின் கீழ் வந்தாலும், அவர்களுக்கும் நிதி உதவி வழங்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சமூக நீதி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட சிறை கண்காணிப்பாளர்கள் மூலமாக இந்த உதவி வழங்கப்படுகிறது. அந்தத் தொகை தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாற்றப்படும் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கேரளாவில் 3 மத்திய சிறைகள் உட்பட மொத்தம் 54 சிறைகளில் 6,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 15

0

0