விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கேரள விவசாயி மரணம்..! வழக்கை சிபிஐக்கு மாற்றியது உயர்நீதிமன்றம்..!

21 August 2020, 4:04 pm
kerala_highcourt_updatenews360
Quick Share

வனத்துறை அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர், சில மணிநேரத்தில் கிணற்றில் இறந்து கிடந்த பி.பி. மத்தாய் என்ற விவசாயியின் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு கேரள உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

நீதிபதி வி.ஜி.அருணின் ஒற்றை நீதிபதி அமர்வு, மத்தாயின் மனைவி தாக்கல் செய்த மனுவில் அனைத்து தரப்பிலிருந்தும் வாதங்களை கேட்டபின், இந்த விவகாரத்தில் விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக மாநில அரசு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், சிபிஐக்கு விசாரணையை மாற்றி உத்தரவிட்டுள்ளது.

மேலும் இறந்த நபரின் இறுதிச் சடங்குகளை செய்யும்படி மத்தாயின் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்தாயின் சடலம் ஜூலை 28 அன்று இறந்ததிலிருந்து ராணி மார்தோமா மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படும் வரை உடல் அடக்கம் செய்யப்படாது என்று அவரது மனைவி ஷீபா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பிடிவாதமாக உள்ளனர்.

வனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு கேமரா அழிக்கப்பட்டது குறித்து விசாரிப்பதற்காக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சித்தர் வனப்பிரிவு வனத்துறை அதிகாரிகள் கைது செய்ததாக கூறப்பட்ட சில மணி நேரத்தில் பிபி மத்தாயின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.