ஸ்வார்டு ஆப் ஹானர் விருது..! முன்னாள் விமானப் படை விமானி..! கேரளா விமான விபத்தில் இறந்த விமானியின் பின்னணி இது தான்..!

8 August 2020, 2:16 pm
captain_sathe_updatenews360
Quick Share

நேற்று கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் கேப்டன், முன்னாள் இந்திய விமானப்படை விமானி மற்றும் ‘ஸ்வார்டு ஆப் ஹானர்’ விருது பெற்றவர் ஆவார்.

இந்த விபத்தில் இறந்ததாகக் கூறப்படும் 20 பேரில் துபாய்-கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இரண்டு விமானிகளில் ஒருவரான முன்னாள் ஏர் விங் கமாண்டர் தீபக் வசந்த் சாதேவும் ஒருவர். கரக்வஸ்லாவின் தேசிய பாதுகாப்பு அகாடமியின் 58’வது பேட்ச்சைச் சேர்ந்தவர் கேப்டன் சாதே. அங்கு அவர் பயிற்சி முடிந்து வெளியேறும்போது ஸ்வார்டு ஆப் ஹானர் விருது பெற்றார்.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூடுதல் டிஜி ராஜீவ் ஜெயின் கூறுகையில், “விமானத்தில் 174 பயணிகள், 10 கைக்குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 5 கேபின் குழுவினர் இருந்தனர். ஆரம்ப அறிக்கையின்படி, மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.” எனத் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த நேரத்தில் விமான நிலையத்தின் பார்வை சுமார் 2,000 மீட்டர் தொலைவில் இருந்ததாகவும், விமான நிலையத்தில் பலத்த மழை பெய்து வருவதாகவும், விமானம் 30 அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததாகவும் சிவில் விமான ஒழுங்குமுறை ஆணையம் டி.ஜி.சி.ஏ. தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 120’க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வருத்தத்தை தெரிவித்த ஏர் மார்ஷல் பி.கே. பார்போரா, கேப்டன் சாதே நிறைய தகுதிகளைக் கொண்ட மிகச் சிறந்த விமானி என்று கூறினார். “நான் 29 படைப்பிரிவுக்கு கட்டளைத் தளபதியாக இருந்த போது அவர் எனக்கு கீழ் பணியாற்றினார். அவர் நிறைய தகுதிகளைக் கொண்ட மிகச் சிறந்த விமானி. இது எனக்கு மிகவும் வருத்தமான நாள்” என்று பார்போரா கூறினார்.

இதற்கிடையே ஏர் இந்தியா விமான விபத்து குறித்து ட்வீட் செய்த பிரதமர் மோடி, உயிர் இழப்பு குறித்து வேதனை தெரிவித்தார். கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான செய்தி வெளியான சில நிமிடங்களில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பிரதமர் மோடி போன் செய்து பேசியுள்ளார்.

கோழிக்கோடு, மலப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஜி. அசோக் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் குழு விமான நிலையத்தில் இருப்பதாகவும், மீட்புப் பணிகளில் பங்கேற்பதாகவும் விஜயன் பிரதமருக்குத் தெரிவித்தார்.

மேலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஏர் இந்தியா விமானத்தில் பல பயணிகளை ஏற்றிச் சென்ற விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டதால் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக தெரிவித்தார்.

Views: - 2

0

0