கேரள போலீஸ் சட்டத் திருத்தத்திற்கு வலுத்த எதிர்ப்புகள்..! பின்வாங்கியது பினராயி விஜயன் அரசு..!

23 November 2020, 3:23 pm
Pinarayi_Vijayan_UpdateNews360
Quick Share

கேரள அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதாகக் கூறி அறிவித்த ஒரு போலீஸ் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று வெளியிட்ட ஒரு அறிவிப்பில், இடது ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள் எழுப்பியுள்ள கவலைகள் காரணமாக, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என்று கூறினார்.

“போலீஸ் சட்டத்திருத்தத்தின் அறிவிப்பு வெளியான பிறகு, வெவ்வேறு தரப்பிலிருந்து வெவ்வேறு கருத்துக்கள் எழுந்தன. எல்.டி.எஃப்-ஐ ஆதரித்தவர்கள் மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக நின்றவர்கள் இந்த சட்டம் குறித்து கவலை தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், சட்டத் திருத்தும் செய்வது உகந்ததல்ல என அரசு முடிவெடுத்துள்ளது” என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

“இது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் சட்டமன்றத்தில் நடைபெறும். மேலும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்ட பின்னர் இது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.

சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் குற்றங்களை தடுக்கும் முயற்சியாக கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்ய கேரள அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், இது தனிநபர்களின் சுதந்திரத்திற்கும் கௌரவத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது என எதிர்ப்புகள் கிளம்பியது.

அவதூறு, பொய் மற்றும் ஆபாச பிரச்சாரங்களுக்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் புகார்கள் சமூகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்துள்ளன. பெண்கள் மற்றும் திருநங்கைகள் உட்பட பல்வேறு பிரிவுகள் மீதான இரக்கமற்ற தாக்குதல்களால் சமூகத்தில் இருந்து கடுமையான போராட்டங்கள் எழுந்துள்ளன. 

குடும்பங்களின் ஒற்றுமை பாதிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் கூட உள்ளன. இதன் விளைவாக தற்கொலைகள் ஏற்படுகின்றன. இதை சட்டப்பூர்வமாகக் கையாள்வதற்கான தேவை ஊடக நிறுவனங்களின் தலைவர்களால் கூட எழுப்பப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டது.

ஆனால் இந்த சட்டத் திருத்தம் முன்மொழியப்பட்ட நோக்கங்களுக்கு மாறாக உள்ளது எனக் கூறி, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சமூகத்தின் அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன.

சமூக ஊடக பதிவுகளுக்கு எதிரான புதிய சட்டம் மீதான எதிர்ப்த்தைத் தணிக்க முதல்வர் பினராயி விஜயன், சமீபத்திய திருத்தம் எந்த வகையிலும் சுதந்திரமான பேச்சு அல்லது பக்கச்சார்பற்ற ஊடகங்களுக்கும் மக்களுக்கும் எதிராக பயன்படுத்தப்படாது என்று கூறியிருந்தார்.

ஆனால், அது எடுபடாத நிலையில், தற்போது வேறுவழியின்றி, சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறுவதாக பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Views: - 0

0

0