மின்வேலியால் பறிபோன பிஞ்சு உயிர்.. துடிதுடித்த தாய் யானையின் செயல்… நெஞ்சை உருகச் செய்யும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
16 November 2021, 3:59 pm
elephant dead - updatenews360
Quick Share

கேரளாவில் மின்வேலியில் உரசியதால் உயிரிழந்த தனது குட்டியை, தாய் யானை பிரிய முடியாமல் நடத்திய பாசப் போராட்டம் பார்ப்போரின் நெஞ்சை உருக்கியது.

இந்தியாவில் காட்டு யானைகளின் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான உயிரிழப்புகள் இயற்கை மரணத்திற்கு எதிரானவை. அதாவது, மின்வேலியில் அடிபட்டும், ரயிலில் மோதியும், காடுகளில் தூக்கி எரியப்படும் அநாவசியப் பொருட்களை சாப்பிட்டோ அல்லது மிதித்தோ ஏற்படும் உடல்நலக்குறைவாலோ, உயிரிழப்பதை நாள்தோறும் செய்திகளில் நாம் பார்த்து வருகிறோம்.

விவசாய நிலங்களை பாதுகாக்க மின்வேலியை அமைக்க அரசு அனுமதியளித்தாலும், வனவிலங்குகளுக்கு உயிரிழப்பு ஏற்படாத வகையில், குறிப்பிட்ட அளவிலான மின்சாரமே செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலானோர் வனவிலங்குகள் மீதான அச்சத்தாலும், அவற்றை வேட்டையாட வேண்டும் என்ற கொடூர குணத்தாலும், உயர் அழுத்த மின்சாரத்தை வேலியில் பாய்ச்சுகின்றனர். இதனால், வனவிலங்குகள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், யானைகளை வளர்ப்பு பிராணிகளாக வளர்த்தும் கேரள மாநிலத்தில் அரங்கேறிய சம்பவம், பார்ப்போரின் மனதை ரணகளப்படுத்தியுள்ளது.

மலப்புழா அருகே இருக்கும் வனப்பகுதியை ஒட்டி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. அப்போது, அந்த வழியாக, தனது 3 வயது குட்டியுடன் வந்த தாய் யானை ஒன்று வந்துள்ளது. எதிர்பார்க்காத விதமாக, குட்டி யானை முதலில் அந்த மின்வேலியை கடக்க முயன்றுள்ளது. அந்த சமயம் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில், தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இதனைக் கண்டு பதறிப்போன தாய் யானை, குட்டியை முட்டியும், தள்ளியும் எழுப்ப முயலுகிறது. ஆனால், எதுவும் பலனளிக்காததால், நிர்கதியாக நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பார்ப்போரின் நெஞ்சை உலுக்குகிறது.

மனிதர்கள் சக மனிதர்களோடு மட்டுமல்லாமல், வனவிலங்குகளோடு ஒன்று சேர்ந்து பயணித்தால் மட்டுமே, இந்த பூமியை இயற்கை பேரிடர்களிடம் இருந்து காப்பாற்ற முடியும். எனவே, இதனை அறிந்து, உணர்ந்து வன எல்லைகளில் வசிக்கும் பொதுமக்களும், மின்வேலி அமைப்பவர்கள் செயல்பட வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Views: - 422

0

0