ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி குற்றவாளியாக அறிவிப்பு..! கொச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

25 September 2020, 4:28 pm
ISIS_Terrorist_UpdateNews360
Quick Share

ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்ட சுபஹானி ஹஜா மொய்தீன் கொச்சியில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றத்தால் இன்று குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தண்டனை குறித்த தகவலை திங்கள்கிழமை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

குற்றவாளி, சுபஹானி ஹஜா மொய்தீன், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் அவர் 2016’ல் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டார்.

மொய்தீன் 2015’இல் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததாகவும், ஈராக் மற்றும் சிரியாவில் பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஈராக் அரசாங்கத்திற்கு எதிராக போரிடுவதிலும் அவர் பங்கேற்றார். பாரிஸில் 130 பேர் கொல்லப்பட்ட 2015’ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் மொய்தீனுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக புதன்கிழமை, பாரிஸில் நடந்த 2015 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக மொய்தீனை விசாரிக்க பிரெஞ்சு விசாரணைக் குழு கேரளா வந்து திரிசூர் நகரில் உள்ள வியூர் சிறைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த மாத தொடக்கத்தில், ஐஎஸ்ஐஎஸ் அச்சுறுத்தல் இந்தியா மீது தொடர்ந்து வளர்ந்து வருவதாக மத்திய அரசு கூறியிருந்தது. உள்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய 122 குற்றவாளிகள் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அப்போது கூறினார். பல மாநிலங்களில் ஐ.எஸ் செயல்படுவது தொடர்பான 17 வழக்குகளை என்ஐஏ பதிவு செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் முதன்முதலாக நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரைக் குற்றவாளி என அறிவித்து என்ஐஏ நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அறிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிக்கான தண்டனை குறித்த விபரங்கள் திங்களன்று வெளியாக உள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Views: - 6

0

0