பங்களாவில் சொகுசு வாழ்க்கை வாழும் ஊழல் கைதி..! வீடியோ வெளியானதால் பரபரப்பு..!
17 November 2020, 7:25 pmராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (ரிம்ஸ்) இயக்குநருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஒரு வசதியான வாழ்க்கையை அனுபவிக்கும் வீடியோ ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல நோய்களால் ரிம்ஸில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பங்களாவில் உலா வருவதைக் காணலாம்.
மூன்று தீவன மோசடி வழக்குகளில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ், 2017’ஆம் ஆண்டில் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்து ஆகஸ்ட் 29, 2018 அன்று அவர் ரிம்ஸின் கட்டண வார்டில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனா வைரஸ் கவலைகள் காரணமாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 5’ஆம் தேதி அதன் இயக்குநரின் இல்லத்திற்கு மாற்றப்பட்டார்.
அவருடைய பாதுகாப்பு காவலர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் பங்களாவுக்கு மாற்றப்பட்டார் என்று ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (ரிம்ஸ்) செயல் இயக்குநர் டாக்டர் மஞ்சு காரி தெரிவித்தார்.
காலியாக இருந்தபோது லாலு பங்களாவுக்கு மாற்றப்பட்டார். ஆனால் புதிய ரிம்ஸ் இயக்குனர் பொறுப்பேற்ற பிறகும் அவர் தொடர்ந்து அங்கேயே இருந்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ரயில்வே அமைச்சராகவும் பணியாற்றிய லாலு பிரசாத் யாதவ், 1990’களில் பீகாரில் தீவனம் மோசடி தொடர்பான வழக்குகளில், டிசம்பர் 2017 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒரு அறிக்கையில், விருந்தினர் மாளிகையில் வசித்து வருவதாக கூறப்படும் ரிம்ஸ் இயக்குனர் டாக்டர் காமேஷ்வர் பிரசாத், “அவர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. சூழ்நிலைகள் மாறும்போது, அவர் பங்களாவை விட்டு வெளியேறுவார் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.