இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவின் கோரதாண்டவம்: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு…!!

Author: Aarthi Sivakumar
14 August 2021, 5:53 pm
Quick Share

சிம்லா: இமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

இமாசலபிரதேசம் கின்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பலத்த நிலச்சரிவு, பெருத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த பஸ், கார்கள் என வாகனங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையினர், உள்ளூர் போலீஸ் படையினர், ஊர்க்காவலர் படையினர் என கூட்டு மீட்புப்பணி நடந்து வருகிறது.

நிலச்சரிவின் இடிபாடுகளை மீட்புப்படையினர் அகற்றிப்பார்த்தபோது, மண்ணோடு மண்ணாக புதைந்துபோய் இருந்த ஒரு டாட்டா சுமோ வாடகைக்காரில் பயணம் செய்த 8 பேரும் பலியாகி இருந்தனர். இந்த இயற்கை பேரிடரில் 10 பேர் பலியானதாக 13 பேர் உயிருடனும் மீட்கப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. அதன்பின்னா் 4 சடலங்கள் நேற்று முன் தினம் மீட்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த பகுதியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, காவல் துறை மற்றும் ஊா்க்காவல் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், நிலச்சரிவில் இருந்து மேலும் 3 சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. இதையடுத்து, பலியானவா்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. மேலும் 13 பேரை காணவில்லை. அவா்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று மாநில அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில் இன்று மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.

Views: - 253

0

0