கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் 9 பேர் பலி..! 80 பேர் மாயம்..!
7 August 2020, 5:12 pmதிருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் உட்பட 80 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்குள்ள மலப்புரம், இடுக்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில் இன்று அதிகாலை அங்குள்ள ராஜமலை பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் தமிழர்கள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதில் 9 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும், தேயிலை தோட்ட பணிக்காக சென்றவர்கள் எனவும் கூறப்படுகிறது.
கனமழையால் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வரும் பகுதிகளில் ஹெலிக்காப்டர்கள் கொண்டு மீட்பு பணியை தொடர அதிகாரிகள் திட்டமிட்டனர்.
ஆனால் கடும் பனி மற்றும் மழை காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து பேரிடர் மீட்புபடையினர் மற்றும் ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், விபத்து ஏற்பட்ட வாய்ப்பு உள்ள பகுதிகளில் மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விமான படையின் உதவியை நாடியுள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் கோரதாண்டவத்தை எதிர்கொள்வதே போராட்டமாக உள்ள நிலையில், கேரளவில் மழையும், பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கிடையே, கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இனி வரும் சில தினங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையமும் ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.