‘சகாப்தத்தை கடந்த தலைமகன்’ : குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்..!

1 September 2020, 9:31 am
Quick Share

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவால் டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக ஆழ்ந்த கோமாநிலையில், செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருடைய இறப்புக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டர் பதிவில், ‘முன்னாள் குடியரசுத் தலைவர் இல்லை எனும் செய்தியை கேட்கும்போது வருத்தமாக உள்ளது. அவருடைய மறைவு என்பது ஒரு சகாப்தம் கடந்ததைப் போன்றது. இந்த நாட்டின் மதிப்புமிக்க மகனை இழந்தவிட்டு நாடே துக்கத்தில் இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில், ‘பாரத் ரத்னா பிரணாப் முகர்ஜி மறைந்ததில் இந்தியா துக்கத்தில் உள்ளது. நம்முடைய நாட்டுக்கான வளர்ச்சிப் பாதையில் அழிக்க முடியாத முத்திரையை விட்டுச்சென்றுள்ளார் பிராணாப். எல்லா வகையான சமூகம் மற்றும் அரசியல் களம் முழுவதிலும் அவர் மதிக்கப்பட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், ‘எதிர்பாராதவிதமாக பிரணாப் முகர்ஜி உயிரிழந்த செய்தியை இந்த நாடு மிகுந்த சோகத்துடன் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நாடு அவருக்கு தெரிவிக்கும் இரங்கலில் நானும் இணைந்துகொள்கிறேன். துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0